ஊரப்பாக்கம் அரசு பஸ்ஸை முந்தும் போது தாய், மகள் செய்த சிறு தவறு.. எதிரே எமனாக வந்த பள்ளி பேருந்து
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிமாகி வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வந்த பின்னர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், ஊரப்பாக்கம், கீரப்பாக்கம் காயரம்பேடு, கண்டிகை உள்பட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்தபடி உள்ளது. வாகன நெருக்கமும் அதிகமாக உள்ளதால், விபத்து அபாயமும் அதிகமாகி வருகிறது. கீரப்பாக்கம் கிராமத்தில் பள்ளி பேருந்து ஒன்று தாய், மகளுக்கு எமனாக மாறி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தேவி . இவருக்கு 45 வயது ஆகிறது. இவரது மகள் சுவாதிக்கு 23 வயது ஆகிறது. நேற்று தாய், மகள் இருவரும் கீரப்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி ஒரே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை சுவாதி ஓட்டிச்சென்றார். காரணைப்புதுச்சேரி-அருங்கால் சாலையில் முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திசென்றுள்ளனர். அப்போது ஊரப்பாக்கத்தில் இருந்து அருங்கால் நோக்கி வந்த தனியார் பள்ளி பேருந்து, சுவாதி ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.

இந்த விபத்தில் தேவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுவாதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுவாதியும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான தாய், மகள் இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கீரப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக சென்னை மற்றும் புறநகரில் வாகனம் ஓட்டும் பெண்கள், அரசு பேருந்து, பள்ளி பேருந்து போன்ற போன்ற பேருந்துகளை முந்தி செல்ல முயற்சிக்கும் போது மிக கவனமாக இருக்கக வேண்டும்.
ஏனெனில் பேருந்து ஓட்டுநர்களில் சிலர் வாகன ஓட்டிகளுக்கு வழிவிடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சில பேருந்து ஓட்டுநர்கள் வலதுபுறம் யாரையும் ஏறவிடாமல் வழி விடாமல் செல்வதாக புகார்கள் உள்ளது. அதையும் மீறி ஏறி செல்லும் போது, எதிரே வரும் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கவனிப்பது இல்லை.. அப்படி கவனிக்காமல் செல்லும் போது தான் விபத்து ஏற்படுகிறது. அப்படித்தான் ஊரப்பாக்கம் விபத்தும் நடந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு நொடி கவனக்குறைவு இன்று தாய்,மகளை பலியாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications
