பறையா(Pariah) என எப்படி சொல்லலாம்? புது சர்ச்சையில் அண்ணாமலை-மன்னிப்பு கேட்க வன்னி அரசு வலியுறுத்தல்
சென்னை: பிரதமர் மோடியை புகழ்வதற்காக பறையா (Pariah) என்ற சொல்லை பயன்படுத்தி புதிய சர்ச்சையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கி இருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை 1995-ல் பறையா என விமர்சனம் செய்ததற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இன்றைய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியை தமிழ்நாட்டில் ஓட ஓட போலீஸ் மூலம் விரட்டிய சர்ச்சை நிகழ்ந்திருக்கிறது என்பதால் பறையா என்ற சொல்லை பாஜக தலைவர் அண்ணாமலை தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நாட்டின் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், பறையரில் இருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் (From a pariah to a ViswaGuru) என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இப்போது பறையர் என்ற சொல்லை அண்ணாமலை பயன்படுத்தியது சர்ச்சையாகி இருக்கிறது.

மன்னிப்பு கேளுங்க- வன்னிஅரசு
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு தமது ட்விட்டர் பக்கத்தில், எச்சரிக்கை என்ற தலைப்பில், பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி @annamalai_k மன்னிப்பு கேட்கவேண்டும் என கொதித்திருந்தார்.

ஆக்ஸ்போர்ட் அகராதி
அத்துடன் துடியன்,பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான் கல்லது சிறந்த குடியும் இல்லை- மாங்குடி மருதனார் புறநானுற்றில் பெருமைப்படுத்தப்பட்ட பறையர்குடியை இழிவு படுத்தும் நோக்கத்தில் கடந்த காலத்தில் #InternationalParaiya என உளறிய சு.சாமி நிலை தான் நாளை ஏற்படும். @annamalai_k பறையாவும் அப்படிதான். மேலும்,பறையா என்பது வரலாற்று அடிப்படையில் தென்னிந்தியாவில் உள்ள தொல்குடி பறையர் சமூகத்தை சேர்ந்தோரை குறிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.பறையா என்று சொன்னால் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது சட்டம் எனவும் வன்னி அரசு எழுதி இருந்தார்.
மேலும் பறையா என்பது இழிவுபடுத்த (offensive) பயன்படுத்தப்படும் பெயர் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மேலும்,பறையா எனும் சொல் அவமதிக்கும் சொல்லாக தென்னிந்தியாவில் பார்க்கப்படுகிறது என்று ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி குறிப்பிடுகிறது.நீக்ரோ என்று அமெரிக்காவில் பயன்படுத்தினால் அது அவமதிப்பு எனவும் வன்னி அரசு விளக்கம் தந்துள்ளார்.

அண்ணாமலை பதில்
இதற்கு பதிலளித்திருக்கும் அண்ணாமலை, அண்ணா வணக்கம்! கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும். வாழ்க வளமுடன்! என பதிலளித்து மேக்மில்லன் டிக்சனரியின் ஸ்கிரீன் ஷாட்டையும் அனுப்பி வைத்துள்ளார்.

பறையாவும் டிக்சனரியும்
அண்ணாமலை பயன்படுத்திய pariah என்ற சொல் குறித்து விவாதம் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. ஆக்ஸ்போர்ட் டிக்சனரி உள்ளிட்டவற்றில் pariah என்ற சொல்லுக்கு தென்னிந்தியாவில் வாழும் ஒரு குடிமக்கள் என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. பறையா என்ற சொல்லை பயன்படுத்துதல் தொடர்பாக நீண்டகாலமாக தொடர்ச்சியாக விவாதங்கள் நம் நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் நடைபெற்றுதான் கொண்டிருக்கிறது. Pariah என்ற சொல் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 500, 600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டவர்கள், இந்தியாவில் பறையர் சமூகம் ஒதுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டதன் அடிப்படையில் தீண்டாமை, ஒதுக்கி வைத்தல், இழிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு pariah என்ற சொல்லை ஆங்கிலத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். இதனையே ஆங்கில அகராதிகளும் குறிப்பிடுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை மிக மிக உணர்வுப்பூர்வமான பிரச்சனை இது.

அன்று சு.சுவாமி
தமிழகத்தில் 1995-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை சர்வதேச பறையா என இன்றைய பாஜகவின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கமான உறவில் இருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. பறையா என பிரபாகரனை விமர்சித்ததன் மூலம் தமிழ்நாட்டில் பறையர்களை இழிவுபடுத்திவிட்டார் என சுப்பிரமணியன் சுவாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய தமிழக போலீசார் தீவிரம் காட்டினர். இதனால் தமிழகத்துக்குள் மாறுவேடத்தில்தான் சுப்பிரமணிய நுழைந்து தப்பி ஓட நேரிட்டது. அந்த காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு சுப்பிரமணி சுவாமி சென்ற போது அதிமுக மகளிரணி கொடுத்த முகம் சுளிக்க வைக்கும் ஆபாச வரவேற்பு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

சர்வதேச சர்ச்சை
வெளிநாடுகளில் pariah என்ற பெயரில் படம் கூட எடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் பிரதமர் பதவியில் இருந்ஹ்ட மகாதீர் முகம்மது, பறையா என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் சர்ச்சை வெடித்தது. மலேசியா வாழ் தமிழர்கள் மகாதீருக்கு எதிராக கொந்தளித்தனர். அவ்வளவு ஏன்? சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் மீதான யுத்தத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சர்வதேச பறையா என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்ததும் சர்ச்சையானது. சர்வதேச அளவிலும் தமிழகத்திலும் pariah என்ற சொல் விவாதப் பொருளாவது தொடருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு கட்சியின் தலைவர் அதுவும் மத்தியில் ஆளும் கட்சியின் தமிழகத்தின் தலைவர் அண்ணாமலை இத்தகைய சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்திருந்தால் சர்ச்சைகள் வந்திருக்காது என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications