ரெட் ஹில்ஸ் அருகே நண்பனுடன் பேசிய கல்லூரி மாணவி.. வார்த்தையைவிட்ட ஆசிரியை.. நடந்த விபரீதம்
சென்னை: கல்லூரி காலத்தில் நட்பு மற்றும் காதல் ஏற்படுவது இயல்பான ஒன்றாக மாறி இருக்கிறது. பலரும் நட்பிலும், ஒரு சிலர் நட்பை தாண்டி காதலிலும் விழுகிறார்கள். அந்த காதல் விவாகரத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் தவறான முடிவெடுக்கிறார்கள். சிலர் நட்பை குறை சொன்னால் கூட தவறான முடிவெடுக்கிறார்கள். நண்பனுடன் பேசி வந்ததை ஆசிரியை திட்டியதால், சென்னை செங்குன்றம் அருகே நர்சிங் மாணவி விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம், என்.எஸ்.கே.கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் மெக்கானிக் ஆக இருக்கிறார். இவரது மகள் ஜெஸ்வினிக்கு 18 வயது ஆகிது. இவர், செங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் படிக்கும்போது, வாலிபர் ஒருவருடன் ஜெஸ்வினிக்கு நட்பு ஏற்பட்டு இருவரும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஆசிரியை ஒருவர், ஜெஸ்வினியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த ஜெஸ்வினி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் உள்ள படுக்கை அறையில் பேனில் உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகீறார்கள். சோழவரம் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் டேவிட் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விவகாரத்தில் மாணவி ஒரு ஆண் மாணவருடன் பேசுவதைப் பார்த்து, ஆசிரியை அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படும் நிலையில், இது உண்மையா என்று விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி நடந்திருந்தால் அது தவறான அணுகுமுறை என்றும் நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.
உண்மையில் மாணவியின் நடத்தை குறித்து கவலை இருந்தால், அவமானப்படுத்தாமல், அவரது மனம் நோகாத அளவிற்கு எடுத்து கூறியிருக்கலாம். பிறரின் முன்பு அவமானமாக பேசினாரா என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஒரு மாணவியைக் கண்டித்தார் என்பதாலேயே ஆசிரியர் தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம்சாட்டவும் முடியாது. போலீசார் தீர விசாரித்த பின்னரே முடிவுகள் தெரியவரும்.
குஜராத்தில் 3 பேர் தவறான முடிவு
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த 47 வயதாகும் ஆர்த்திபென் சோனி அவரது 24 வயது மகன் நீல்காந்த் சோனி, 22 வயது மகள் ஜென்னி சோனி ஆகியோர் நேற்று அவர்களது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். வீட்டின் வெவ்வேறு அறைகளில் மூவரின் உடலும் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்கள் மீட்கப்பட்டனர். மேலும் அங்கிருந்து 3 கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் கடிதங்களில். 33 லட்சம் கடன் சுமையும், இரண்டு கார்களுக்கு இன்ஸ்டால்மென்ட் பாக்கியும் அவர்களுக்கு இருந்தது தெரியவந்துள்ளது. தங்கள் வீட்டை விற்று கடன்களை அடைக்கவும் அவர்கள் ஆலோசித்தது வந்துள்ளார்கள். ஆனால் அதற்குள் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்கள்.
தற்கொலை தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்சனைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். தற்கொலை எண்ணங்கள், மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட, உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரமும் செயல்படும்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம் செயல்படும்)




Click it and Unblock the Notifications
