ரூ.80 லட்சம்.. 1500 சதுர மீ.. பிரம்மாண்டமாக அமையும் கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம்! என்ன சிறப்பு?
ரூ.80 லட்சத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு மாவட்ட மற்றும் மாநில கடலோர மண்டல மேலாண்மை குழு அனுமதியளித்துள்ளது.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட வளாகத்தில் 1,500 சதுர மீட்டர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதன் ஒரு பகுதி தாழ்தளத்தில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மெரினாவில் கருணாநிதி நினைவிட வளாகம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் இந்த நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. அதேபோல நினைவிடத்தின் அருகில் வங்கக்கடலில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா சின்னம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் நடத்திய கருத்துக்கேட்பு கூட்டம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 31ம் தேதி கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டத்தில் பேனா சின்னத்தை வைப்பதற்கு சமூக ஆர்வலர்களும், சூழலியல் செயற்பாட்டாளர்களும், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பேனா நினைவுச் சின்னம் நிச்சயம் வைக்கப்படும் என்று திமுகவினர் கூறினர்.
இந்த பரபரப்புக்கிடையில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கருணாநிதி நினைவிட வளாகத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இதற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழுவை அணுகியது. இதற்கான ஒப்புதலை அளித்த மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழு, மாநில கடலோர மண்டல மேலாண்மை குழுவுக்கு கருத்துருவையும் பரிந்துரைத்தது. இதனையடுத்து இறுதியாக மாநில கடலோர மண்டல மேலாண்மை வல்லுநர் குழுவினர் இந்த திட்டம் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

கேள்விக்கு உரிய பதில் கொடுக்கப்பட்டதையடுத்து இக்குழு அருங்காட்சியகத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஒப்புதல்கள் கிடைத்ததையடுத்து 1,500 ச.மீ பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கருணாநிதியின் வாழ்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், அவருடைய இலக்கியம், கதை வசனம், அவர் ஆட்சியில் இருந்தபோது தொடங்கிய திட்டங்கள், எழுத்தோவியங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அதேபோல தாழ்தளத்திலும் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி அமைக்கப்பட்டிருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உயிரிழந்தார். அவரு உடல் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications