ஆ.ராசாவை ஏன் மன்னிப்பு கேட்க வெச்சீங்க? தவெக பேசுறது தெரியலையா? அட, இவர் திமுகவினரையே கேட்டுட்டாரே
சென்னை: எதிர்க்கட்சியினருக்கு கொள்கையோ தகுதியோ கிடையாது, அவர்களிடம் அரசியல் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது என்பது தெரிந்த விஷயம்தான். அதனால் தான் ஆ. ராசா சப்ஜெக்ட் ரீதியாகப் பேசிப் பார்த்துவிட்டு, அவர்களுக்குச் சுய அறிவோ உணர்வோ இருக்கிறதா என்று அடித்து பார்ப்பதற்காக கொஞ்சம் காரமாக பேசினார். அப்படி அவர் பேசிய பேச்சுக்கு அந்த ஊசியாவது வேலை செய்கிறதா என்று பொறுத்துப் பார்க்காமல், கட்சிக்குள் இருப்பவர்களே, அவரை எதிர்த்து பேசி, உடனடியாக மன்னிப்பு கேட்க வைத்தும் விட்டார்கள்" என்று திராவிட இயக்க சிந்தனையாளரும், எழுத்தாளருமான டான் அசோக் ஆதங்கப்பட்டுள்ளார்.
South beat என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள டான் அசோக், "திமுகவின் கடைசி ஆயுதம் ஆபாசம் என்று தவெக சொல்கிறது.. ஆனால் தவெகவின் முதல் ஆயுதமும் ஒரே ஆயுதமும் ஆபாசம்தான்.

மிசா காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு, சோ மற்றும் குருமூர்த்தி போன்ற சித்தாந்த எதிரிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தியாக வரலாற்றைக் கொண்டவர் ஸ்டாலின். அப்படிப்பட்ட ஒரு தலைவரின் தியாக வாழ்க்கையின் மீது அசிங்கமான அவதூறுகளை அள்ளி வீசுபவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
சிறை சென்ற இயக்க தலைவர்
தன் அப்பாவை யாராவது அசிங்கமாகத் திட்டினால் சும்மா இருக்க முடியாதது. அதுபோலத்தான், சிறை சென்று தியாகம் செய்த இயக்க தலைவரைப் பற்றிப் பேசும்போது தொண்டர்களுக்கு இயல்பாக கோபம் வருகிறது. தமிழில் பேசப்படும் எல்லா வார்த்தைகளையும் அப்படியே நேரடிப் பொருளில் எடுத்துக்கொள்ளக் கூடாது.
முதலமைச்சர் இல்லாத நேரத்தில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆ. ராசா பேசிய சில வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுவரைக்கும் நிர்மல் குமாரோ, ரமேஷோ தாங்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்களா? தினமும் 10 பொய் சொல்கிறார்கள்.. வாயை திறந்தாலே போதும்.. ஆனால் திமுகவினர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டாலே உடனே மன்னிப்பு கேட்க வைக்கும் சூழல் உருவாகிறது.
ஆ.ராசா காட்டமான பேச்சு
இயக்கத்தை விட தன்னுடைய சொந்த நற்பெயரும் பிம்பமும்தான் பெரிது என நினைத்துச் செயல்படுபவர்களால் கட்சிக்கு எந்தப் பயனும் இல்லை. கொள்கை உணர்வும் சுய அறிவும் இல்லாத எதிர்க்கட்சியினருக்குப் புரியவைக்கவே ஆ. ராசா அப்படி கடுமையாகப் பேசினார். தவெக போன்ற புதிய அரசியல் வரவுகளை மிகவும் நிதானமாகவும் தெளிவான வழியிலும் கையாண்டு, அவர்களை அவர்களின் சொந்த பேச்சினாலேயே அம்பலப்படுத்துபவர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே.
எதிர்க்கட்சியினர் எத்தனையோ அசிங்கங்களை பேசும்போது அதைக் கண்டிக்காத ஊடகங்களும் மற்றவர்களும், கோபத்தில் ஆ. ராசா ஒரு வார்த்தை பேசிவிட்டதும் உடனே அதைக் கண்டிக்க வந்துவிடுகிறார்கள். இதில் வேதனை என்னவென்றால், எதிராளிகள் செய்யும் அசிங்கங்களை எல்லாம் கண்டிக்காத நிலையில், ஆ. ராசா ஒரு வார்த்தை சொல்லிவிட்டார் என்பதற்காக கனிமொழி போன்றவர்களுக்கே கோபம் வருகிறது. தவெக செய்யும் அசிங்கத்தை கண்டிப்பதில்லை.
அரசியல் நாகரீகம்
எதிர்க்கட்சியினருக்கு கொள்கையோ தகுதியோ கிடையாது, அவர்களிடம் அரசியல் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது என்பது தெரிந்த விஷயம்தான். அதனால் தான் ஆ. ராசா சப்ஜெக்ட் ரீதியாகப் பேசிப் பார்த்துவிட்டு, அவர்களுக்குச் சுய அறிவோ உணர்வோ இருக்கிறதா என்று அடித்து பார்ப்பதற்காக கொஞ்சம் காரமாகப் பேசினார்.
ஆனால், அப்படி அவர் பேசிய பேச்சுக்கு அந்த ஊசியாவது வேலை செய்கிறதா என்று பொறுத்துப் பார்க்காமல், கட்சிக்குள் இருக்கும் நம்மவர்களே, அவரை எதிர்த்துப் பேசி, உடனடியாக மன்னிப்பு கேட்க வைத்தும் விட்டார்கள்.
கலைஞர் கருணாநிதி சென்னைக்குத் திருட்டு ரயிலில் வரவில்லை என்பதையும், அவர் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே சொந்தமாகக் கார் மற்றும் பங்களா வாங்கிவிட்டார் என்பதையும் 50 ஆண்டுகளாக திமுகவினர் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.
திமுக மீது அவதூறு
எதிர்க்கட்சியினரின் தரமற்ற பொய்களைத் தங்களின் நேரத்தைச் செலவழித்து "டீபங்க்" செய்து உண்மை நிலையை விளக்குவதே திமுகவிற்குப் பெரிய வேலையாகிவிட்டது... அத்துடன், ஜனநாயகத்தில் மக்கள் மீண்டும் மீண்டும் தவறானவர்களை தேர்ந்தெடுப்பது பொய்ப் பரப்புரைகளின் விளைவே.
வரலாற்று ரீதியாக ஜெர்மனியில் ஹிட்லரையும் இந்தியாவில் மோடியையும் மக்கள் தேர்ந்தெடுத்ததை உதாரணமாகப் பார்த்தால், ஜனநாயகம் எப்போதும் மக்கள் விரும்பும் சரியான தேர்வாக மட்டுமே அமைவதில்லை என்பதும் புரியவரும்.
மேட்டூர் அணை நிகழ்வில் ரூ. 6 கோடி செலவு செய்யப்பட்டது குறித்தும், தவெக தலைவர் விஜய் தொடர்பான செலவுகள் குறித்தும் கேள்வி எழுப்பாத ஊடகங்கள், திமுகவைச் சேர்ந்தவர்கள் கார் வாங்கினால் மட்டும் தவறாக சித்திரிக்கின்றன. முதலமைச்சர் ஸ்டாலினின் பயணத்தை ஆடம்பரம் என்றும், பிறரின் நிகழ்வுகளை எளிய பயணம் என்றும் சித்தரிப்பது ஊடகங்களின் தப்பான போக்கு" என்றெல்லாம் காட்டமாக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
