ஆ ராசா vs எல் முருகன்.. நீலகிரி தொகுதியில் வெல்லப்போவது யார்? தந்தி டிவி கணிப்பு என்ன?
சென்னை: . நீலகிரி தொகுதியில் வெல்லப்போவது யார் என்பது குறித்து தந்தி டிவி கணித்துள்ளது.இந்த கணிப்பில் ஆ ராசா வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், பாஜக, பாமக அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் களத்தில் இறங்கி உள்ளன. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தமிழக தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே மொத்தமாக அடித்து தூக்கும் என்றே கூறியுள்ளன. சில கணிப்புகளில் ஒரிரு இடங்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வரும் என்று கணித்துள்ளன.
தமிழ்நாட்டின் பிரபல செய்தி ஊடகமான தந்தி டிவி தனது இரண்டாவது கருத்துக்கணிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் கருத்துக்கணிப்பு வெளியிட்டிருந்தது. அப்போதும் சரி, இப்போதும் சரி, திமுகவின் வாக்கு சதவீதம் ஒரே அளவில் உள்ளதாக கூறியுள்ளது. அதேநேரம், அதிமுக, பாஜகவின் வாக்கு சதவீதம் உயரும் என்றும் கூறியுள்ளது. அதேநேரம் கடந்த முறையைவிட இந்த முறை எடுத்த கணிப்பில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
தொகுதி வாரியான நிலவரத்தை பொறுத்தவரை இந்த செய்தியில் நீலகிரி தொகுதி நிலவரத்தை பார்ப்போம்.. மலைகளின் அரசி' என்று அழைக்கப்படும் உதகமண்டலத்தை தலைமையிடமாக கொண்ட நீலகிரி லோக்சபா தொகுதியில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் இருக்கின்றன. மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்தில் இருக்கிறது. அவினாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் தொகுதி ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன. மொத்தம் உள்ள ஆறு தொகுதியில் 3 மலையிலும், 3 சமவெளியிலும் உள்ளது. கலாச்சாரம் முதல் மக்களின் மனநிலை வரை 6 தொகுதியிலும் 3 விதமாக இருக்கிறது. காரணம் 3 மாவட்டங்களில் தொகுதி இருப்பது தான்.
நீலகிரி தொகுதியில் கடந்த முறை திமுகவின் ஆ ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தியாகராஜனை விட சுமார் 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கடந்த முறை அதிமுக, பாஜக இணைந்து கூட்டணியாக போட்டியிட்டன. இந்த முறை தனித்தனியாக களம் இறங்கி உள்ளன. நீலகிரி தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் ஆ ராசா 36 சதவீதம் முதல் 42 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வன் 30 முதல் 46 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் 21 முதல் 27 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், நாம் தமிழர் கட்சியின் ஆ ஜெயகுமார் 3 முதல் 6 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், மற்றவர்கள் 1 முதல் 3 சதவீதம் வாக்குகள் பெறுவார்கள் என்றும் தந்தி டிவி கணிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications