சூர்யவம்சம் காமெடி இந்த படத்தை பார்த்துதான் எடுத்திருப்பாங்க போல! கலக்கிய முத்துராமன்! துணைக்கு சோ!
சென்னை: சூர்யவம்சம் திரைப்படத்தில் மணிவண்ணன் பேருந்தில் தூங்குவோரை குழப்பும் சீன் பழைய படத்தை பார்த்து எடுத்திருப்பார்களோ என கூறி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
சூர்யவம்சம் திரைப்படத்தில் மணிவண்ணன் ஒரு பேருந்து நிலையத்தில் காத்திருப்பார். அப்போது அந்த வழியாக வரும் பேருந்தில் ஒருவர் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருப்பார். அவரை மாப்ளே என அழைத்து அவரிடம் குசலம் விசாரிப்பார். ஆனால் அந்த நபருக்கோ மணிவண்ணன் யாரென்றே தெரியாது.

கடைசியாக பொங்கலுக்கு கரும்புடன் ஊருக்கு வரேன் மாப்ள என்பார். பஸ் புறப்பட்டதும் அந்த நபர் தலையை பிய்த்துக் கொள்ளாதபடி செல்வார். அப்போது மணிவண்ணனிடம் இன்னொரு காமெடி நடிகர் கேட்பார். யாருண்ணே அவரு! அதற்கு மணிவண்ணன் யாருக்கு தெரியும், அடிச்சிபுடிச்சி ஜன்னலோர சீட்டை பிடிப்பது, பிறகு தூங்குவது, இப்ப நான் யாரு தெரியாம அவன் ஊர் போய் சேர்ற வரைக்கும் தூங்காமல் போவான்ல அதில் ஒரு ஆனந்தம் என்பார்.
அது போல் அடுத்த பேருந்து வரும் அப்போது இயக்குநர் ராஜ்குமார் (தேவயானியின் கணவர்) அவர் தூங்கி கொண்டிருப்பார். மணிவண்ணன் பின் சீட்டில் இருப்பவர்களை ஒவ்வொருவரையாக அழைத்து ராஜ்குமாரை எழுப்ப சொல்வார். அவர் எழுந்து மணிவண்ணனை பார்த்ததும் மாமா எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா, பொங்கலுக்கு கரும்புடன் ஊருக்கு வரேன் என்பார்.
என்னடா இது நாம் குழப்ப நினைத்தால் நம்மை ஒருத்தன் குழப்புகிறானே என மணிவண்ணன் உடன் இருக்கும் காமெடி நடிகரிடம் அசடு வழிவார். பேருந்தில் ராஜ்குமாரிடம், பக்கத்து சீட்டுக்காரர், அவர் உங்கள் சொந்தக்காரரா என கேட்பார். அதற்கு ராஜ்குமார் அவர் யாருன்னே எனக்கு தெரியாது. சும்மா டைம்பாஸுக்கு அப்படி செய்தேன் என்பார். இந்த காமெடியில் அந்த படத்தில் வைரலானது.
இந்த நிலையில் உறவு சொல்ல ஒருவன் என்ற படத்தில் முத்துராமனும் சோவும் ஒரு காரில் பயணிப்பார்கள். அப்போது ஒரு பஸ் ஸ்டாப்பில் பேருந்தை நிறுத்தி இப்போ வேடிக்கையை பாரு என சொல்லிவிட்டு பெண் கூட்டத்திற்கு செல்வார். அப்போது ஹாய் லலிதா என்பார், உடனே ஒரு பெண் திரும்பி பார்க்க, சவுக்கியமாக இருக்கியா என கேட்பார். அதற்கு அந்தபெண் ஓ என்பார்,
உடனே முத்துராமன் என்ன இது மருந்து பாட்டில் என கேட்பார். அதற்கு அந்த பெண், அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பார். அதற்கு முத்துராமன், அடடடே நானும் உங்கள் வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சு, அம்மாவை ரொம்ப விசாரித்ததாக சொல்லு என கூறிவிட்டு அந்த பெண்ணின் மூக்கை பிடித்து என்ன திருதிருனு முழிக்குறே , என்ன தெரியல என்பார். அதற்கு அந்த பெண் நீங்க? என கேட்பார்.
அதற்கு முத்துராமன், சோவிடம் "பாருடா முருகேசா, இதுதான் உலகம், இந்த பொண்ணு என்னையே மறந்துடுச்சி! உங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் 3 வருஷம் குடியிருந்தேனே , எத்தனை நாள் உங்கள் வீட்டுல வந்து காப்பி சாப்பிட்டிருப்பேன். சார் சார்னு என்கிட்ட பிரியமா பழகுவியே அதெல்லாம் மறந்துட்டியா, சரிசரி ஒரு நாள் வீட்டுக்கு வரேன், அம்மாவை ரொம்ப கேட்டதாக சொல்லு என கூறிவிட்டு முத்துராமன் காரில் ஏறி சென்றுவிடுவார்.
பதிலுக்கு தன் பங்குக்கு சோவும் , ஏம்மா பொண்ணு உங்கள் அம்மாவை நானும் கேட்டதா சொல்லு என்பார். உடனே அந்த பெண்ணுடன் இருப்பவர்கள், ஏ லலிதா யாருடி அவரு என கேட்க, அதற்கு அந்த பெண் அதான் எனக்கும் தெரியலை, அந்த ஆளை நான் பார்த்ததும் இல்லை. என் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு வக்கீல்தான் குடியிருக்காரு ஒரு வேளை அடையாளம் தெரியாம பேசிட்டு போறாரோ என கேட்க, அதற்கு அது எப்படிடி உன் பேரை அவ்வளவு கரெக்ட்டா சொல்றாரு, இருந்தாலும் உனக்கு ரொம்ப ஞாபகம் மறதிடி என்பார்கள்.

பின்னர் சோ, முத்துராமனிடம், ஏன்டா அந்த பொண்ணு யாரு என கேட்க அதற்கு முத்துராமனோ அது யாருக்கு தெரியும் என்பார், உடனே சோ அப்ப எப்படிடா கரெக்ட்டா லலிதானு சொன்னே என்பார், அதற்கு முத்துராமனோ அது ரொம்ப ஈஸிடா, இந்த பெண்கள் கூட்டத்தில் பெரும்பாலான பெண்கள் பெயர் கல்யாணி, ராதா, உமா, லலிதானு தான் இருக்கும். நாம் பெயரை சொல்லி கூப்பிட்டதும் எந்த பெண் திரும்பி பார்க்கிறதோ அவகிட்ட கதை அளக்க வேண்டியதுதானே, இப்ப அந்த பொண்ணு நான் யாரு என்னன்னு தலையை பிய்ச்சிகிட்டு இருக்கும் என்பார். உடனே சோ ஒரு வேளை அந்த கூட்டத்தில் லலிதான்னு யாருமே இல்லனா, அதற்கு முது்துராமன் சாரி நீங்கள் லலிதா மாதிரி இருந்தீங்கன்னு சொல்லி சமாளிக்க வேண்டியதுதான் என்பார்.
எனவே இந்த படத்தை பார்த்துதான் சூர்ய வம்சத்தில் அந்த காமெடி சீன் எடுத்திருப்பார்கள் என கூறி அந்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications