கூட்டி கழிச்சி பார்த்தா அதிமுகவில் 225 தொகுதிகள் ஹவுஸ்புல்; மீதியுள்ள 9 தொகுதிகள் யாருக்கு தெரியுமா!
சென்னை: அதிமுக 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது. பாமகவுக்கு 23 தொகுதிகள் கொண்ட பட்டியலையும், பாஜகவுக்கு 20 தொகுதிகள் கொண்ட பட்டியலையும் கொடுத்து விட்டது.
மற்ற 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை கொடுத்து விட்டது. மொத்தம் 225 தொகுதிகள் போக அதிமுக கூட்டணியில் இன்னும் 9 தொகுதிகள் மீதமுள்ளன.
த.மா.கா அதிமுக தலைமையுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே மீதமுள்ள தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பான விவகாரம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் திருவிழா
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் ஓரளவு தொகுதி பங்கீட்டு பணியை முடித்து, தொகுதிகள் பட்டியலையும் சுறுசுறுப்பாக அறிவித்து வருகின்றன. திமுக கூட்டணியை பொறுத்தவரை திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து விட்டது. திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என்று தெரிகிறது.

தொகுதி பங்கீட்டு கொடுத்த அதிமுக
ஆளும் கட்சியான அதிமுகவை பொறுத்தவரை முதற்கட்டமாக 6 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல், 2-வது கட்டமாக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் என்று மொத்தம் 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது. மேலும் பாமகவுக்கு 23 தொகுதிகள் கொண்ட பட்டியலையும், பாஜகவுக்கு 20 தொகுதிகள் கொண்ட பட்டியலையும் கொடுத்து விட்டது.

225 தொகுதிகள் நிரம்பி விட்டன
இது தவிர பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும், புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம்(தனி) தொகுதியும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எழும்பூர் (தனி) தொகுதியும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு கும்பகோணம் தொகுதியும், பசும்பொன் தேசிய கழகத்துக்கு மதுரை மையம் தொகுதியும் கொடுத்து விட்டது. அதாவது மொத்தம் 225 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் நிரம்பி விட்டன.

9 தொகுதிகள் காலி
இன்னும் 9 தொகுதிகள் மட்டுமே காலியாக உள்ளன. அதாவது திரு.வி.க.நகர், ஈரோடு கிழக்கு, பெரம்பலூர், பட்டுக்கோட்டை, திருச்சுழி, தூத்துக்குடி, பத்மநாபபுரம், கிள்ளியூர், தஞ்சாவூர் ஆகிய 9 தொகுதிகள் காலியாக உள்ளன. த.மா.கா அதிமுக தலைமையுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே மீதமுள்ள தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பான விவகாரம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த விவரங்கள்
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு விவரங்களை சுருக்கமாக பார்ப்போம்:-
அதிமுக - 177 தொகுதிகள்
பாமக -23 தொகுதிகள்
பாஜக -20 தொகுதிகள்
பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1 தொகுதி
புரட்சி பாரதம் கட்சி - 1 தொகுதி
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - 1 தொகுதி
மூவேந்தர் முன்னேற்ற கழகம் - தொகுதி
பசும்பொன் தேசிய கழகம் - 1 தொகுதி
மொத்தம் - 225 தொகுதிகள்
மீதம் இருப்பவை - 9 தொகுதிகள்












Click it and Unblock the Notifications