ஆந்திர தேர்தல் களத்தைக் கலக்கும் ஆட்டுப் பாஷை! சுனா பானா ஸ்டைலில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட சூப்பர் வீடியோ!
சென்னை: காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்று வாக்காளர்களை அதிகம் ஈர்க்கும்படியாக அமைந்துள்ளது.
அதற்குக் காரணம், அந்தப் பிரச்சார வீடியோக்களில் பெரிய வசனங்கள் இல்லை. நீட்டி முழங்கும் மேடைப் பேச்சுகள் இல்லை. கொள்கை முழக்கங்கள் இல்லை. பெரியோர்களே! தாய்மார்களே! என்று பழைய காலத்துப் பாணி துளிகூட இல்லை. இன்னும் சொல்லப் போனால் வார்த்தைகளே இல்லை.

அந்தப் பரப்புரை வீடியோ முழுக்க 'மே.. மே.. மே..' என்று ஆடு கத்துவதைப் போல அத்தனை கதாபாத்திரங்களும் கத்திக் கொண்டு திரிகின்றனர். அந்த மே.. மே.. பாஷையில் பல விசயங்களும் புரிந்துவிடுகிறது.
இந்த வீடியோ ஆந்திராவில் ட்ரெண்டிங். சமூக வலைத்தளங்களில் சக்கைப் போடு போடுகிறது.
மாநிலம் தாண்டி மாநிலம் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்தளவுக்கு பாஜகவை வச்சு செய்திருக்கிறது பிரச்சார வீடியோ. வயிறு குலுங்க குலுங்க காமெடி சீன்கள் நிரம்பி வழிகிறது.
வடிவேலு ஒரு படத்தில் சூனா பானா கதாபாத்திரத்தில் ஆடு திருடும் காமெடியில் கலக்கி இருப்பார். அந்த சூனா பானா ரேஞ்சுக்கு இந்தத் தேர்தல் பிரச்சார வீடியோ பொதுமக்களைச் சந்தோஷப்படுத்தி வருகிறது.
ஒரு தாய்க்குலம் வெங்காயம் வாங்கப்போகிறார். ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபா என்று போர்டு போட்டுள்ளார்கள். உடனே தாய்க்குலம் வேதனையில் மே..மே.. என்று கத்துகிறார். பதிலுக்குக் கடைக்காரர் மே.. மே.. என்று கத்துகிறார்.
அங்கேதான் ஒரு பஞ்ச்! பாரதிராஜா படங்களில் 'எ ஃபிலிம் பை பாரதிராஜா' என்று கார்டு போடுவதைப் போல ஒரு கார்டு போட்டு காட்டுகிறார்கள். பாஜக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை 3 மடங்கு உயர்வு என்று. அங்கேதான் 'திக்' என்று ஒரு பல்ப் மண்டைக்குள் எரிகிறது.

அடுத்து வேலைத் தேடி ஒரு இளைஞர் ஃபைலை வைத்துக் கொண்டு அலைகிறார். வேலைக் கிடைக்கவில்லை. படித்துப் பெற்ற சான்றிதழ்களை வீதியில் தூக்கி எறிகிறார். அங்கே அதே மே.. மே.. சவுண்ட்.. கார்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 20 கோடி இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று விளக்கம் தரப்படுகிறது.
பாஜக ஆட்சி முதலில் குடும்பத் தலைவியைப் பாதித்தது, அடுத்து இளைஞர்களைப் பாதித்தது. மூன்றாவது விவசாயிகள். வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் விவசாயி ஒருவரைக் காட்சிப் படுத்தும் இந்த வீடியோ விவசாயிகளின் சராசரி கடனில் அளவு 57% அதிகரித்துள்ளதாக மண்டையில் தட்டுகிறது.
மேலும் பாஜக ஆட்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தக் காட்சிகளில் எங்கும் டயலாக் இல்லை. அதே மே.. மே.. ஆட்டுப் பாஷைதான்.
அந்த ஆட்டுப் பாஷை வீடியோ ஆங்கில பாஷை உட்படப் பல மொழிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறது.
இருங்க இருங்க.. வீடியோ கதை அதுக்குள்ள முடியல. ஒரு பெண் வீட்டுக்கடனைக் கட்ட முடியாமல் சேட்டுக் கடையில் தாலியை அடமானம் வைத்துவிட்டு மே .. மே.. என்று அலறுகிறார்.

அங்கே வீட்டுக்கடன் 39% ஆக அதிகரித்து விட்டதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. கூடவே மோடி அரசு அவரது கார்பரேட் நண்பர்களுக்காக மட்டும் ரூ.16 லட்சம் கோடி ரூபாய் தொழில் கடன் தள்ளுபடி செய்துள்ளார் என்கிறது.
2016 ஆண்டு கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மோடி அரசு பணமதிப்பிழப்பை நடைமுறை செய்தது. இதனால் அன்றாடங்காய்ச்சிகள் கூட பாதிக்கப்பட்டனர். வங்கிகளில் கால்கடுக்க நின்று கஷ்டங்களை அனுபவித்தனர்.
அதன் பலன் என்ன என்று பாஜகவைக் கேட்டால் கருப்புப் பணத்தை ஒழித்துவிட்டோம் என்று விளக்கம் தந்தது. ஆனால், இந்த காங்கிரஸ் பிரச்சார வீடியோ என்ன சொல்கிறது தெரியுமா? 2015 ஆம் ஆண்டு இருந்ததை விடக் கருப்புப் பணத்தின் புழக்கம் 3 மடங்கு அதிகரித்து விட்டது என்கிறது.
கூடவே 15 லட்சம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் பாஜக தந்த வாக்குறுதியும் காற்றில் கரைந்து காணாமல் போய்விட்டது என்கிறது.

அப்படித்தான் 2014இல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாயாக இருந்தது. 2024இல் ஒரு லிட்டரின் விலை? 109 ரூபாய் என்கிறது.
2014இல் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை 410 ரூபாய். 2024இல் எவ்வளவு தெரியுமா? 1200 ரூபாய். அவ்வளவு விலைவாசி உயர்வு. இந்த விலை உயர்வால் மக்கள் வலிதாங்காமல் புலம்புக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்தச் சத்தம் ஆட்சியாளர்கள் காதில் மே..மே.. என்று கேட்கிறது என்று மறைமுகமாக ப்ளாக் காமெடி செய்து விமர்சிக்கிறது.
இறுதியாக பாஜக அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற நூதன திட்டம் மூலம் ரூ. 3.8 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது என்று செய்தி டிவியில் மே..மே.. என்று வாசிக்கப்படுகிறது. சலூன் கடையில் இதைக் கேட்கும் இளைஞர் ஒருவர் பீதியில் உறைந்து போகிறார்.
இந்த வசூல் வேடையை ''ஹஃப்தா கலெக்ஷன்' என்று விமர்சித்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஹஃப்தா என்றால் நன்கொடை. அதாவது நன்கொடை என்ற பெயரில் கார்பரேட் கம்பெனிகளை சிபிஐ, இடி, ஐடி அதிகாரிகளை வைத்து ரெய்டு செய்து மிரட்டு பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறது காங்கிரஸ்.

ஆகவே இவர்களுக்குப் புத்தி புகட்டுங்கள். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று அந்த வீடியோ முடிகிறது. அதே போல் 'மோடியின் கியரண்டி' என்று விளம்பரம் பொதுமக்களிடம் இருந்த ஒட்டுத் துணையையும் உருவி விட்டதாக காமெடி செய்கிறது.
இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications