A2B உரிமையாளர்கள் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்? ₹1,700 கோடி டீலில் இவ்வளவு வரியா?
சென்னை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பிரபலமான உணவக நிறுவனமாக விளங்குவது அடையாறு ஆனந்த பவன். A2B என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை சுமார் ₹1,700 கோடி கொடுத்து போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இனி ஜியோ ஹாட்ஸ்டார் துணைத் தலைவர் உதய் சங்கர் இதன் தலைவராகிறார்.
₹1,700 கோடி பெற்ற A2B உரிமையாளர்களான சீனிவாச ராஜா மற்றும் வெங்கடேசன் ஆகியோர் எவ்வளவு மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) செலுத்த வேண்டும்? இவ்வளவு பெரிய தொகைக்கு பங்குகள் கைமாறும்போது அரசுக்கு எவ்வளவு வரி கிடைக்கும்? ₹1,700 கோடி பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா? என்று பல நெட்டிசன்கள் கேட்கிறார்கள். அதற்கான பதிலைப் பார்ப்போம்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அடையாறு ஆனந்த பவன் (A2B) நிறுவனம், தென்னிந்தியா முழுவதும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அடையாறில் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட ஒரு இனிப்புக் கடை, இன்று நாடு முழுவதும் 160 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
பல வெளிநாடுகளிலும் 30-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
A2B நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான முயற்சியில் அதன் உரிமையாளர்களான சீனிவாச ராஜா மற்றும் வெங்கடேசன் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சூழலில், போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் அதன் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியுள்ளது. இதற்கு எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.
ஜிஎஸ்டி கிடையாது!
பல நெட்டிசன்கள் கேட்பதைப் போல, இந்த ஒப்பந்தத்துக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா என்றால், தேவையில்லை என்பதுதான் பதில்.
பொதுவாக, நிறுவனத்தின் சொத்துகள் அல்லது உணவகங்களின் விற்பனைக்கான ஒப்பந்தம் இது கிடையாது. நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை மற்றொரு முதலீட்டு நிறுவனத்துக்கு மாற்றும் ஒப்பந்தமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் ஒருவர் கூறுகையில், "நம்முடைய ஜிஎஸ்டி சட்டப்படி, பத்திரங்கள் மற்றும் பங்குகள் (Securities) ஜிஎஸ்டி விதிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் வரையறைக்குள் வராது. எனவே, பங்குகளை விற்பனை செய்வதற்கான பரிவர்த்தனை மதிப்பான ₹1,700 கோடிக்கு நேரடியாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது" என்றார்.
ஆனால், இதனால் அரசுக்கு எந்த வரியும் கிடையாது என்று அர்த்தமில்லை. பங்குகளை விற்பனை செய்தவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் வருமான வரி நிச்சயம் விதிக்கப்படும்.
A2B நிறுவனர்கள் எவ்வளவு கேபிடல் கெயின்ஸ் வரி செலுத்த வேண்டும்?
போதி ட்ரீ மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மூலதன ஆதாய வரிதான் (Capital Gains Tax). நிறுவனர்கள் தங்களிடம் இருந்த பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டியிருந்தால், அந்த லாபத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டியது கட்டாயம்.
A2B நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத பங்குகள் என்பதால், அவற்றை 24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாயமாக அரசு கருதும்.
ஒருவேளை இவ்வாறு நடந்திருந்தால், வருமான வரி விதிகளின்படி நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படும். இதனுடன் பொருந்தக்கூடிய சர்சார்ஜ் (Surcharge) மற்றும் 4 சதவீத சுகாதாரம் மற்றும் கல்வி வரி (Health and Education Cess) ஆகியவையும் விதிக்கப்படும்.
ஆனால், ₹1,700 கோடி முழுவதற்கும் 12.5 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூற முடியாது. நிறுவனர்கள் பங்குகளை வாங்குவதற்கு அல்லது முதலீடு செய்வதற்குச் செலவிட்ட தொகையைக் கழித்த பிறகு கிடைக்கும் லாபத்துக்குத்தான் வரி கணக்கிடப்படும்.
₹1,700 கோடி முழுவதும் லாபம் என்றால் எவ்வளவு வரி?
ஒருவேளை ₹1,700 கோடியும் வரிக்குரிய நீண்டகால மூலதன ஆதாயம் என்றால், அடிப்படை வரி மட்டும் ₹212.50 கோடியாக இருக்கும்.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, அதிகபட்சமாக 15 சதவீத சர்சார்ஜ் மற்றும் 4 சதவீத செஸ் ஆகியவை சேர்க்கப்பட்டால், மொத்த வரி சுமார் ₹254 கோடியாக இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால், இது ஒரு தோராயமான கணக்கு மட்டுமே. உண்மையில் நிறுவனர்களின் முதலீட்டுச் செலவு, பங்குகளை வாங்கிய முறை, விற்பனையாளர்களின் வரி நிலை மற்றும் ஒப்பந்தத்தின் கட்டமைப்பு ஆகியவற்றைப் பொறுத்தே இறுதி வரி நிர்ணயிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
A2B நிறுவனத்தின் ₹1,700 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் உண்மையில் எவ்வளவு தொகை வரியாக அரசுக்குச் செல்லும் என்பதற்கான பதில், ஒப்பந்தத்தின் முழுமையான நிதி மற்றும் பங்கு விவரங்கள் வெளியாகும்போதுதான் தெரியவரும்.


Click it and Unblock the Notifications
