ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. “முந்தைய ஆட்சியில் என்ன நடந்தது தெரியுமா?” ஆதவ் அர்ஜுனா கேட்ட கேள்வி
சென்னை: ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். முந்தைய ஆட்சியில் ஏன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, முந்தைய ஆட்சியில் திமுகவினரே போலீசாரை கட்டுப்படுத்தியதாக பரபர புகாரை முன்வைத்துள்ளார்.
ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி தருவது போல தந்துவிட்டு அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட சிறுமிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பகீர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சில பரபர கருத்துகளை கூறியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த விவகாரம் எப்போது வெளியே வந்தது, ஏன் அதை உடனடியாக விசாரிக்கவில்லை என்ற கேள்வியை சட்டத்துறை அமைச்சர் கேட்டிருக்கிறார். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த திமுகவினரை பார்த்து இந்த கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு எப்போதும் விளக்கம் வராது. பொதுவாகவே திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருந்தது என்றால், திமுகவின் மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு சட்டம், தெரிந்த தொழிலதிபர்களுக்கு ஒரு சட்டம், கட்சிக்காரர்களுக்கு ஒரு சட்டம், குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சட்டம் என இருந்தது.
திமுக மீது குற்றச்சாட்டு
தமிழ்நாடு காவல்துறையை இயக்கியது திமுகவின் குடும்பம்தான்; டிஜிபி கிடையாது. உதயநிதியின் நண்பர்கள்தான் எஸ்பிக்களை இடமாற்றம் செய்து கொண்டிருந்தார்கள். யார் யார் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் தற்போது காவல்துறையில் எந்தவித அரசியல் தலையீடும் கிடையாது. முதலமைச்சரின் நேரடிப் பார்வையில், அவருக்கு நேரடியாக ரிப்போர்ட் சென்று, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், ஏன் தவெக நபர்களே தவறு செய்திருந்தாலும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்கிறார்.
குறிப்பாக பெண்கள், சிறுமிகள் விவகாரத்தில் எந்தவித தயவுதாட்சண்யமும் இல்லாமல் உடனடியாக உயர் அதிகாரிகளை கூட்டி நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் முதலமைச்சராக தான் விஜய் செயல்பட்டு வருகிறார்.
போலீசார்
எந்தவொரு பிரச்சினையும் உடனடியாக உருவாவதில்லை; இந்த கட்டமைப்பு பல காலமாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் பழைய கட்டமைப்பை உடைத்தெறிந்து, காவல் துறையில் அரசியல் தலையீடு இல்லாமல் புதிய கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம். திமுக ஆட்சியில் இன்ஸ்பெக்டர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது.. திமுக மாவட்ட செயலாளர் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். எஸ்பிக்கள் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். இப்போது அந்த நிலை இல்லை.
அதேபோல் முதலமைச்சர் ஃபண்ட், குடும்ப ஃபண்ட், அமைச்சர் ஃபண்ட், எம்எல்ஏ ஃபண்ட் என வசூலித்து ஊழல் செய்த கட்டமைப்பை இந்த 3 மாதங்களில் ஒழித்து துடைத்தெறிந்திருக்கிறோம். 'தேர்தலில் பணம் இல்லாமல் ஜெயிக்க முடியும்' என்பதை நிரூபித்தவர் ஆளுமை கொண்ட எங்கள் முதலமைச்சர் விஜய். அதனால்தான் தொழில் அதிபர்களுக்கு மட்டும் ஃபேவர் செய்ய வேண்டும் என்ற சிஸ்டம் இன்று தூக்கி எறியப்பட்டுள்ளது.
கமிஷன்
2021 முதல் 2026 வரை தொழிலதிபர்களை மிரட்டி மாதம் மாதம் குடும்பத்துக்கும் அமைச்சர்களுக்கும் கமிஷன் வாங்கினார்கள். சினிமா துறையை எடுத்துக்கொண்டால், 2021க்கு முன்பு ரெட் ஜெயண்ட் நிறுவனம் என்ன செய்தது? ஆட்சிக்கு வந்த பிறகு உதயநிதி, அவரது மனைவி, மகன் என மொத்த தியேட்டர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். பேச்சை கேட்கவில்லை என்றால் ரெய்டு விட்டு மிரட்டினார்கள். ஆனால் இன்று தமிழ்நாட்டில் தொழிலதிபர்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாகத் தொழில் செய்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
