நான் பிறந்ததுல இருந்தே விவசாயி தம்பி.. சன்ன ரகம்னா என்ன? ஆதவ் அர்ஜுனாவுக்கு பாடமெடுத்த கேஎன் நேரு!
சென்னை: சன்ன ரகம் அரிசியை விளைவிக்க விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்க உள்ளதாக பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். சன்ன ரகம் அரிசியை விளைவிக்க முடியாது என்று கூறிய கே.என்.நேரு, அதனை வெளியில் இருந்தே வாங்க முடியும் என்பதை விளக்கமாக கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ரேஷன் கடை அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும் தான் மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை என்று கூறினார். இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பேசுகையில், கே.என்.நேருவிடம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. அவற்றிலேயே நெல் விளைவித்து கொள்கிறார். ஆனால் பரம ஏழையாக ரேஷன் கடையில் தான் அரிசி வாங்குகிறேன் என்று கூறுகிறார். அதேபோல் சன்ன ரக நெல் அரிசிக்கு அதிக ஊக்கத்தொகை வழங்குவதற்கு காரணம், அதனை உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும் விஜய் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
இதற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எழுந்து பேசுகையில், சன்ன ரக நெல்லை நாம் விளைவிக்க முடியாது. அது அதிகளவில் கிடைப்பதில்லை. ஆந்திரா பொன்னி போன்ற சில அரிசி ரகம் மட்டுமே அதிகம் கிடைக்கும். சன்ன ரகம் பட்டத்தில் தான் பெற முடியும். அவற்றை வெளியில் இருந்துதான் வாங்க முடியும், விளைவிக்க முடியாது. சன்ன ரகம் தாளடி பட்டத்தில் தான் உருவாகும்.
நவறை பட்டத்தில் சன்ன ரகம் போட்டால், விளைச்சல் அதிகம் வராது.. விவசாயிகளுக்கு நஷ்டம் தான். நீங்கள் நினைப்பது போல் விளைவிக்க முடியாது. அதேபோல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருக்கிறேன் என்று கூறினார். எவ்வளவு நிலம் வைத்திருந்தாலும், சாப்பிட முடிவதை தான் சாப்பிட முடியும். சக்கரை நோய் இருப்பவர்கள், ரேஷன் அரிசியை சாப்பிட்டால் தான் குறையும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன் காரணமாகவே ரேஷன் அரிசியை சாப்பிடுகிறேன். இதனை விளக்கமாகவே சொல்கிறேன். நாங்கள் உற்பத்தி செய்து உங்களை போன்றோருக்கு கொடுக்கவே பயன்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். விவசாயம் தொடர்பாகவும், சன்ன ரக அரிசி தொடர்பாகவும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசிய பேச்சு தவெகவினர் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.


Click it and Unblock the Notifications
