அதிமுகவும் தவெகவும் ஒன்று தான்.. சட்டசபையில் கண்காட்டிய ஆதவ் அர்ஜுனா.. இவ்வளவு ஓபனா சொல்லிட்டாரு!
சென்னை: சட்டசபையில் அதிமுக எம்எல்ஏவும் நம்முடைய எம்எல்ஏ தான் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்த நிலையில், அக்கட்சியில் இருந்து பலரும் தவெகவில் இணைந்தனர். இதனை ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக ஒப்புக் கொண்டதை போல் பேசி இருப்பது பலரையும் திரும்ப பார்க்க வைத்துள்ளது.
முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் சட்டசபையில் நடந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதற்கு முன் அதிமுகவைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் அணியை முதல்வர் விஜய் நேரில் சந்தித்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இது சர்ச்சையாகியது.

தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். இதனால் தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த இணைப்பு நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், அதிமுகவில் உள்ள 90% பேர் தவெகவில் இணைய வேண்டும். அனைவரையும் வரவேற்கிறோம் என்று அறிவித்தார்.
அதேபோல் அதிமுக மற்றும் தவெக இரண்டும் வெவ்வேறு கட்சிகள் அல்ல என்பதை ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்த நிலையில் சட்டசபையிலும் அதே வார்த்தையை பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் பூவிருந்தவல்லி எம்எல்ஏ பிரகாசம் பேசுகையில், பூவிருந்தவல்லி தொகுதியில் செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
அதனை விரைவில் முடித்து தடுமாறு பேரவை தலைவர் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என்றார். இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்து பேசுகையில், திருவள்ளூர் நமது மாவட்டம்.. அங்கு 10க்கு 10 தொகுதிகளில் வென்றுள்ளோம். நிச்சயமாக அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். அப்போது எதிர் தரப்பில் 9ல் வென்றீர்கள்.. அதிமுக 1ல் வென்றது என்று குரல் வந்தது.
உடனே ஆதவ் அர்ஜுனா, சாரி 10க்கு 9.. எல்லாம் நம்மது தான். அதிமுகவும் நம்மளும் ஒன்றுதான் என்றார். அதற்கு சபாநாயகர், அந்த உறவை பற்றி எல்லாம் பேரவைக்கு தெரியாது என்று சொல்ல, உடனே ஆதவ் அர்ஜுனா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கும் இருக்கும் உறவை கூறினென் என்றார். இதனால் சபையில் சபாநாயகர் உட்பட அனைவரும் சிரித்தனர்.


Click it and Unblock the Notifications
