Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்!
சென்னை: அரசியலில் சிஸ்டத்தை மாற்ற நினைத்த ரஜினியை திமுக தடுத்து நிறுத்தியது என்றும், கடைசியில் அவர் அந்த குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார் என்றும் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். அவரது பேச்சால் கடும் கோபம் அடைந்துள்ள ரஜினி ரசிகர்கள் ஆதவை கடுமையாக விமர்சித்துள்ளனர். கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது எனவும் விமர்சித்துள்ளனர்.
சாதி வாரிகணக்கெடுப்பை நடத்தக்கோரி தவெக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் குறித்து பேசிய பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அரசியலுக்கு ரஜினியை வரவிடாமல் தடுத்தது திமுக
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு பிரபலமான தலைவராக வர வேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்தார். அரசியலில் சிஸ்டத்தை மாற்ற நினைத்தார். எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இதே திமுக குடும்பம் பல மிரட்டல்களை கொடுத்து அவர் அரசியலுக்கு வராமல் பார்த்துக்கொண்டார்கள்.
இன்றைக்கு அவருடைய நிலைமை என்ன? கடைசியில் அவர்கள் குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களில் நடிக்க போய் விட்டார். அவர் மேல் விமர்சனம் கிடையாது. ஆனால், அரசியலில் அந்த மனவலிமை நம்ம விஜய் கிட்ட இருக்கு என்பதை இங்கே பதிவு செய்கிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.
கோபம் அடைந்த ரஜினி ரசிகர்கள்
நம்முடைய தலைவர் மீது தி.மு.க. தனிப்பட்ட விமர்சனங்கள் செய்தாலும், அவர் அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் பெண்களுக்காக, பெண்கள் நலனுக்காக 12 வாக்குறுதியை கொடுத்து இருக்கிறார். அவர் பயந்து கொண்டு வீட்டில் இருக்கவில்லை" என்று பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதவ் அர்ஜுனா கருத்தை விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் ரவி, ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ரவி கூறியிருப்பதாவது:-
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம்
ரஜினிகாந்த் அவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.. கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார்.
மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல; தனது பலத்தை நிருபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை. கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும், பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ரஜினி ரசிகர்கள் பலரும், "பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி" என்ற கேஷ்டேக்கை போட்டு விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications