"ஜெயில்லயே இருங்க".. ஜாமீன் கேட்ட ஆருத்ரா நிறுவன மேலாளர்கள்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஆருத்ரா நிறுவனம் சார்பில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. மொத்தம் ரூ.2,428 கோடி வரை பொதுமக்களிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் கிளை மேலாளர்கள் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசையை துண்டி, பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில், தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நிறுவனம், சுமார் ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ரூசோ, ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஆவடி கிளை மேலாளர்கள் அருண்குமார், மற்றும் ஜெனோவா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமார், ஜெனோவா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கு விசாரணையில் இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆருத்ரா நிறுவனத்தின் அருண்குமார், ஜெனோவா ஆகியோரின் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தமிழகத்தில் இந்த நிறுவனம் சார்ந்த மோசடி என்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில்தான் வழக்கில் கைதாகி உள்ள சிறையில் உள்ள ஆவடி கிளை மேலாளர்கள் அருண் குமார், ஜெனோவா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் புழல் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை மீண்டும் தொடர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications