’ஆபரேசன் அறிவாலயம்’ ஸ்டாலின் கையில் ரிப்போர்ட்..பண்ணை வீட்டில் பரபர பிளான்! கூடவே இருக்கும் உதயநிதி!
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் தொடங்கியுள்ள 'ஆபரேசன் அறிவாலயம்' தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட ஆய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கைகள் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் இருப்பதாகவும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்சியில் முக்கிய மாற்றங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது. ஆட்சியில் இருந்தபோதும் மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது கட்சித் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய விரிவான ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், அடிமட்ட தொண்டர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்
இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விரிவான அறிக்கைகள் சமீபத்தில் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கைகள் வெறும் தேர்தல் புள்ளிவிவரங்களை மட்டும் கொண்டதாக இல்லாமல், கட்சிக்குள் நீண்ட காலமாக இருந்து வந்த அதிருப்திகள், நிர்வாக குறைபாடுகள், தொகுதி அளவிலான பிரச்சினைகள், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொண்டர்கள் அதிருப்தி
குறிப்பாக, கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் தங்களது கருத்துகளை வெளிப்படையாக பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் காலத்தில் சில இடங்களில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராகவே உள்கட்சி வேலை நடந்ததாகவும், சில தொகுதிகளில் வேட்பாளர்கள் தனிச்செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
திமுக ஆட்சி
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் அதிகார மையங்களாக கருதப்பட்ட சிலர் குறித்து கூட கடுமையான கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய வட்டாரங்கள், அரசு நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்திய சில அதிகாரிகள் ஆகியோரின் செயல்பாடுகள் கட்சிக்கும் அரசுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின்
இதுவரை இந்த அறிக்கைகள் குறித்து ஸ்டாலின் எந்த பொதுக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும் முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அறிக்கையில் என்ன இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு திமுக வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில்தான் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு தேர்தல் ஆய்வு அறிக்கைகளை முழுமையாக படித்து ஆராய்வதற்கான திட்டமிடல் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடுமையான முடிவுகள்
திமுக வட்டாரங்களில் பேசப்படுவதாவது, கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில கடுமையான முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதாகும். குறிப்பாக தேர்தல் தோல்விக்கு காரணமாக கருதப்படும் சில நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, மாவட்ட அளவிலான பொறுப்புகளில் மாற்றம் செய்ய வேண்டுமா, கட்சி அமைப்பை முழுமையாக மறுசீரமைக்க வேண்டுமா என்பன போன்ற விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தலைமுறை
கட்சிக்குள் பல ஆண்டுகளாக இருந்து வந்த அதிருப்திகளை களைந்து, புதிய தலைமுறை நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தும் முயற்சியும் இந்த ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடுகளும், பல முக்கிய நிர்வாகிகள் குறித்து வெளியாகும் தகவல்களும் திமுக தலைமையை தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளதாம்.
படிப்படியாக மாற்றங்கள்
அதேநேரத்தில், இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமா அல்லது படிப்படியாக மாற்றங்கள் அறிவிக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இருப்பினும், தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக மேற்கொள்ளும் மிக முக்கியமான உள்கட்சி ஆய்வாக இது பார்க்கப்படுகிறது.
சுத்திகரிப்பு நடவடிக்கை
அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசப்படும் தகவல்படி, திமுகவில் விரைவில் ஒரு "சுத்திகரிப்பு நடவடிக்கை" தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதற்கான தொடக்க ஆலோசனைகளே தற்போது பண்ணை வீட்டில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின்
இதனால், வரும் வாரங்களில் திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள், புதிய நியமனங்கள், சில முக்கிய நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகள் போன்றவை நடக்கலாம் என்ற தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் மற்றும் உதயநிதி நடத்தும் ஆலோசனை விரைவில் பல அதிரடி மாற்றங்களை அரங்கேற்றலாம் என்றும் சொல்கின்றனர் திமுகவினர்.












Click it and Unblock the Notifications