இந்தியாவை இனி தொட முடியாது.. 3 அதிநவீன போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் உள்ளிட்ட 3 அதிநவீன போர்க்கப்பல்களை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இந்த கப்பல்கள் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.
மத்திய அரசு சார்பில் நம் நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின், 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம் 3 புதிய கப்பல்களை தயாரித்துள்ளது. இந்த கப்பல்களில் உள்ள 75 சதவீத பொருட்கள் இந்தியாவில் சேர்ந்தவை.

இந்த கப்பல்களின் பெயர்கள் ஐஎன்எஸ் துனகிரி (INS Dunagiri), ஐஎன்எஸ் அக்ராய் (INS Agray), ஐஎன்எஸ் சன்ஷோதக் (INS Sanshodak) என்பதாகும். கொல்கத்தாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனம் தான் இந்த கப்பல்களை தயாரித்துள்ளது.
இந்த கப்பல்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று ஐஎன்எஸ் துனகிரி (InS Dunagiri), ஐஎன்எஸ் அக்ராய் (INS Agray) மற்றும் ஐஎன்எஸ் சன்ஷோதக் (INS Sanhodhak)உள்ளிட்ட அதிநவீன போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒரே நேரத்தில் இந்த 3 கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைப்பது என்பது நம் நாட்டின் பாதுகாப்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும்.
இதில் ஐஎன்எஸ் துனகிரி போர்க் கப்பலானது நம் நாட்டின் புராஜெக்ட் 17 ஏ என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 5வது அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பலாகும். இந்த போர்க்கப்பல் அட்வான்ஸ்ட் ஸ்டெல்த் வகையை சேர்ந்தது. இதனால் எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் துல்லியமாக தாக்குதல் நடத்தும். பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்த போர்க்கப்பலில் வைத்து எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து தாக்கி அழிக்க முடியும்.
அதேபோல், ஐஎன்எஸ் அக்ராய் கப்பலானது கடலில் இருக்கும் அச்சுறுத்தலை கண்டுபிடித்து அழிக்கும் திறன் கொண்டது. கடலுக்கடியில் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து அழிக்கும் வகையில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 'அர்னாலா கிளாஸ்' எனப்படும் ஆழமற்ற கடற்பகுதியில் பயணிக்கும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் ஆகும். இந்த கப்பலில் இலகுரக டார்பிடோக்கள், ராக்கெட் லாஞ்சர்கள், சோனார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் ஐஎன்எஸ் சன்ஷோதக் கப்பலானது ஆய்வு கப்பலாகும் (Survey ships). இது கடலாய்வு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட 4-வது பெரிய சர்வே கப்பலாக உள்ளது. . ஆழ்கடல் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகளை துல்லியமாக வரைபடம் தயாரிக்க இந்தக் கப்பல் உதவும். இந்த ஆய்வுகளை துல்லியமாக மேற்கொள்ள இந்த கப்பலில் ஏயூவி மற்றும் ஆர்ஓவி உள்ளிட்ட மேம்பட்ட ஆய்வு அமைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications