“எந்த பால் பொருட்கள் உற்பத்தியையும் நிறுத்தவில்லை” - ஆவின் நிறுவனம் விளக்கம்!
சென்னை: ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவலை ஆவின் நிர்வாகம் மறுத்துள்ளது. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினசரி சுமார் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பாலை பதப்படுத்தி, பலவகைகளில் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர, பால் உப பொருள்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருள்களை தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தினசரி ரூபாய் 1.50 கோடி மதிப்பிலான பால் மற்றும் பொருட்கள் விற்பனையாகின. தற்போது, ஆவினில் 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆவினில் 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவலை ஆவின் நிர்வாகம் மறுத்துள்ளது.
ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தம் குறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களும் வழக்கம்போல தயாரிக்கப்பட்டு, விற்பனை நிலையங்களுக்கும் சில்லறை விற்பனை முகவர்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு மாறானவை. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.
தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பால் பொருட்களின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது ஆவின் பால் பொருட்களுக்கு நுகர்வோரிடையே தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பை பிரதிபலிக்கிறது.
மேலும், விற்பனை முகவர்களிடமிருந்து பெறப்படும் தேவைக் கணிப்புப் பட்டியல்களின் அடிப்படையில், அவர்களுக்குத் தேவையான பால் பொருட்களைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
