ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம் நிறுத்தப்படுகிறது? தமிழக அரசின் முடிவு.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், தனது பிரபல 'கிரீன் மேஜிக்' (பச்சை நிற பாக்கெட்) பால் விநியோகத்தை சென்னையில் 60 முதல் 70 சதவீதம் வரை திடீரெனக் குறைத்துள்ளது. 2023ல் இருந்து படிப்படியாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை எளிய மக்கள் அதிக விலை கொடுத்து தனியார் பால் பிராண்டுகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Aavin

கோடை காலத்தில் பால் கொள்முதல் குறைவு மற்றும் 'கிரீன் மேஜிக்' பால் விற்பனையில் ஏற்படும் கடும் நிதி இழப்பு ஆகியவை இந்த முடிவுக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. சென்னையில் தினசரி 14 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும் நிலையில், 4.5% கொழுப்புச் சத்து கொண்ட கிரீன் மேஜிக் பால் மட்டும் சுமார் 7.5 லட்சம் லிட்டர் அளவுக்கு விற்பனையாகும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த விநியோகம் 2.5 லட்சம் லிட்டராக சரிந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆவின் அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டை மறுத்து வருகின்றனர். கோடைகால கொள்முதல் குறைவு காரணமாக தற்காலிகமாக 10 முதல் 15 சதவீதம் மட்டுமே விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலைமை சீராகும் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எனினும் ஆவின் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ் இது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிறுவனம்

ஆவின் 'கிரீன் மேஜிக்' பாலை லிட்டருக்கு 44 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. ஆனால் உற்பத்திச் செலவு சாதாரண காலங்களில் 48-49 ரூபாயாகவும், கோடை காலத்தில் 49-51 ரூபாயாகவும் உயர்கிறது. இதனால் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் 4 முதல் 5 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் இதே தரத்திலான பாலை 64 முதல் 68 ரூபாய் வரை விற்கின்றன.
மேலும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் கொள்முதல் செய்யும் பாலில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. FSSAI விதிமுறைகளின்படி கொழுப்புச் சத்தை சமன் செய்ய வெளிச்சந்தையில் இருந்து வெண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்காக மட்டும் மாதம் 65 முதல் 75 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது என ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FSSAI கொழுப்புச் சத்து விதிமுறைகள்:

• டோண்ட் பால் - 3%
• தரப்படுத்தப்பட்ட பால் (கிரீன் மேஜிக்) - 4.5%
• முழு கொழுப்பு பால் - 6%

2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் 3.5% கொழுப்புச் சத்து கொண்ட 'டெலைட்' பாலுக்கு மாற முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் நுகர்வோரின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.
வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வேதனை

கடந்த திங்கள்கிழமை முதல் பால் விநியோகம் பாதியாகக் குறைந்துள்ளதாக பால் முகவர்கள் தெரிவித்தனர். வழக்கமாக 100 லிட்டர் வாங்கும் சில்லறை வியாபாரிகளுக்கு இப்போது 25 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. பெரிய முகவர்களுக்கு 3,000 லிட்டருக்குப் பதிலாக 1,000 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.
வட சென்னையைச் சேர்ந்த சில்லறை வியாபாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் கடைக்கு வரும் 10 வாடிக்கையாளர்களில் 5 பேர் பச்சை நிற பாக்கெட் பாலையே கேட்கிறார்கள். முன்பு ஒரிரு நாட்கள் தட்டுப்பாடு இருந்தால் போதும், இப்போது 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. எனவே தனியார் பால் அதிகம் ஆர்டர் செய்ய வேண்டியுள்ளது" என்றார்.

கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி மரியா செல்வம், "வழக்கமாக 23 ரூபாய்க்கு வாங்கும் 500 மி.லி. ஆவின் கிரீன் மேஜிக் பால் இப்போது கிடைப்பதில்லை. தனியார் பால் 34 ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது. மாதம் 330 ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி, அரசு உடனடியாக தலையிட்டு ஆவின் விநியோகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+