Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய வகை ஆவின் பால் விலை உயர்வு பிரச்னை.. ஆவினின் விளக்கம்.. திமுக அரசின் மீது விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய வகை கிரீன் மேஜிக் பிளஸ் பால் 450 மில்லி லிட்டர் விலை 25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கான காரணம் குறித்து ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சில்லரை பிரச்னை காரணமாக உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுத்துள்ள நிலையில், அதுதொடர்பாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஆவின் நிறுவனம் சார்பில் கடந்த 12 ஆம் தேதி புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், அதிக புரதச் சத்துமிக்க, வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், சேலம் ஆகிய 3 ஒன்றியங்களில் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

aavin dmk

கிரீன் மேஜிக் பாலின் விலையைவிட இந்த பால் லிட்டருக்கு ரூ. 11 அதிகம் என்றும், கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்த நிலையில், ஆவின் பால் நிர்வாகம் சார்பில் விலை உயர்த்தப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இடையே வைட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைபாடு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதால் அதற்கு ஏற்றவாறு 4.5 சதவீதம் கொழுப்பு சத்து மற்றும் 9 சதவீதம் இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பாலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

சில்லறை விற்பனையாளர்களுக்கு சற்று அதிக கமிஷனுடன் சில ஒன்றியங்களில் மட்டும் குறைந்த அளவில் உற்பத்தி செய்து, அதனுடைய சந்தையை கண்காணிக்க உள்ளோம். மேலும், சில்லறை தட்டுப்பாடு காரணமாக, 450 மிலி ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தற்போது விற்பனை செய்யப்படும் பிற வகையான பாலின் அளவு குறைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக ஆவின் பால் விலை ஏற்றமா? யாரை ஏமாற்ற முயல்கிறது ஆவின் நிறுவனமும் திராவிட மாடல் அரசும்! என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் வரும் 18-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பச்சை உறை பாலின் விலை லிட்டருக்கு ரூ.11 விலை உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தேன். அது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆவின் நிறுவனம், சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி ரூ. 25 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு வினோதமான காரணத்தைக் கூறியிருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் விளக்கம் நகைப்பைத் தான் ஏற்படுத்துகிறது.

ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விட்டு, அதற்கு சில்லறைத் தட்டுப்பாடு தான் காரணம் என்பது மக்களை முட்டாள்களாக்கும் செயல் ஆகும். தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22க்கு விற்கப்படுகிறது. சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும், ஆவினுக்கும் இருந்திருந்தால் அதன் விலையை 500 மிலி ரூ.20 என்று குறைத்திருக்கலாம் அல்லது பாலின் அளவை 550 மிலியாக உயர்த்தி ரூ.25 என விலை நிர்ணயித்து இருக்கலாம்.

ஆனால், பாலின் அளவையும் 50 மிலி குறைத்து விட்டு, விலையையும் ரூ.3 உயர்த்துவது எந்த வகையில் நியாயம்? மக்களை ஏமாற்றும் வகையில் மிகப்பெரிய மோசடியை செய்து விட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக மேலும், மேலும் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. சில்லறைத் தட்டுப்பாடு என்ற ஒரு காரணம் போதாது என்று சில்லறை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களை கருத்தில் கொண்டும் , அவர்களுக்கு சற்று அதிக கமிஷன் தரும் நோக்குடனும் விலை உயர்த்தப்படுவதாகவும் ஆவின் கூறியிருக்கிறது.

ஆவின் நிறுவனத்தின் இந்த விளக்கங்களையெல்லாம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+