தீபாவளி பண்டிகைக்கு ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. அறிமுகம் செய்யும் ஆவின்! இந்த காம்போ பேக்குகளை பாருங்க!
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ஸ்வீட் விற்பனையை தொடங்கி உள்ளது ஆவின் நிறுவனம். தீபாவளி பண்டிகைக்கு 6 சிறப்பு வகைகளை ஆவின் அறிமுகம் செய்துள்ளது. அதோடு, பண்டிகை கால ஸ்பெஷல் காம்போ பேக்குகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அதேபோல் அனைவரின் வீடுகளிலும் பலகாரங்கள் செய்து உற்றார் உறவினர் என பலருக்கும் வழங்குவது வழக்கம். பலர், கடைகளிலும் இனிப்பு வாங்கி மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

ஆவின் தீபாவளி ஸ்பெஷல்: கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம், பல இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய சலுகை விலைகளில் இனிப்பு, கார வகைகள் விற்பனையை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
6 சிறப்பு இனிப்பு & காரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா உள்ளிட்ட 6 சிறப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளா்கள் மற்றும் துணைப் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் பால்வளத் துறை அமைச்சா் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்களை உருவாக்குவது, சங்க உறுப்பினா்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

அமைச்சர் உத்தரவு: மேலும், தீபாவளியை முன்னிட்டு ஆவின் சாா்பில் காஜு பிஸ்தா ரோல், காஜு கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா, மிக்சர், முறுக்கு உள்ளிட்ட 6 சிறப்பு பலகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பண்டிகை காலங்களில் பொது மக்களுக்கு தேவைக்கேற்ப இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதோடு, கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் தீபாவளி விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டார்.
காம்போ ஆஃபர்கள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சிறப்பு சலுகைகளை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில், மைசூர்பா 200 கி, மிக்சர் 200 கி, ஆவின் குக்கீஸ் 80 கி, ரூ.10 சாக்லேட் -1 அடங்கிய காம்போ ரூ.300க்கு விற்கப்படுகிறது.
சிறப்பு காம்போ ஆஃபர் பேக்ஸ்: இதேபோல், நெய் பாதுஷா 250 கிராம், பாதாம் மிக்ஸ் 200 கிராம், குலாப் ஜாமூன் 250 கிராம், மிக்சர் 200 கி, ரூ.10 சாக்லேட் -1 காம்போ ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காஜு பிஸ்தா ரோல் 250 கி, காஜூ கட்லி 250 கி, நெய் பாதுஷா 250 கி, முந்திரி அல்வா 250 கி ஆகிய இனிப்புகள் அடங்கிய காம்போ ரூ.900க்கு சிறப்பு சலுகையில் விற்பனையாகிறது. ஆவின் பால் பாக்கெட்டுகளில், ஆவின் ஸ்பெஷல் காம்போ பேக் பற்றிய விளம்பரங்களும் அச்சிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications