சின்ன வயதில் அரியவகை நோய்.. கால்களை இழந்த மாணவி அபிநயாவை மீண்டும் நடக்க வைத்த திமுக அரசு! நெகிழ்ச்சி
சென்னை: திமுக அரசின் உதவியால் மீண்டும் நடக்கத் தொடங்கிய மாணவி அபிநயா, அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து, அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அபிநயா. இவர் எஸ்.எல்.இ எனப்படும் ரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டார். இவர், இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, தனது இரு கால்களிலும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மிகுந்த வலியுடன் முன் பாதங்கள் கருத்துப் போன நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த பிறகும் அவரது கால்கள் குணமடையாமல் சிறுமி மிகுந்த அவதியுற்று வந்தார்.

சிறுமி அபிநயாவின் நிலை பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது அறிவுறுத்தலின்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார் அபிநயா. அங்கு அவருக்கு, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை எனப் பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர். அதன் பின், ரத்தத்தில் உள்ள நச்சு குறைவதற்கான மருந்துகள் செலுத்தப்பட்டு அதனை சரி செய்து சிறுமியின் இருகால்களின் முன் பாதங்களும் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை காயங்கள் முழுவதுமாக ஆறி, தற்போது வலி நன்கு குறைந்து அவர் நலமாக உள்ளார். இதையடுத்து, வெளிநாட்டில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட இயற்கை கால்களைப் போன்றே உள்ள செயற்கை கால் பாதங்கள் ரூ.2.86 லட்சம் செலவில் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிறுமி அபிநயாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
செயற்கை கால்கள் மூலம், சிறுமி அபிநயா தற்போது எளிதாக நடந்து வருகிறார். செயற்கை கால்கள் மூலமாக அவரால் சாதாரணமாக அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ள முடிகிறது. இதனையடுத்து, நேற்று காலை அமைச்சர் மா. சுப்பிரமணியனை சிறுமி அபிநயா மற்றும் அவரது தாய் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தான் மீண்டும் நடப்பதற்கு காரணமாக இருந்த முதல்வருக்கு சிறுமி அபிநயா நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications