ABP: மீண்டும் திமுகவின் கோட்டையாகிறதா சென்னை? தலைநகரில் அக்கவுன்ட் ஓபன் செய்யும் தவெக? ஏபிபி சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் திமுக எத்தனை இடங்களில் வெல்லும் என்பதை ஏபிபி சர்வே தெரிவித்துள்ளது. அது போல் அதிமுக, தவெக ஆகிய கட்சிகளின் எண்ணிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் சென்னை மாவட்டத்தில், 2026 சட்டசபைத் தேர்தலுக்கான அரசியல் சூடு இப்போதே கிளம்பியுள்ளது. சமீபத்தில் ஏபிபி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள், சென்னையில் மீண்டும் ஒருமுறை பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் கட்சிகளின் பலம் பின்வருமாறு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது:
திமுக கூட்டணி: 10 - 11 தொகுதிகள்
அதிமுக கூட்டணி: 2 - 4 தொகுதிகள்
தமிழக வெற்றிக் கழகம் : 1 - 2 தொகுதிகள்
தவெக ஒன்று அல்லது இரு தொகுதிகள் என்றால் வெல்ல போவது யார் என தெரியவில்லை. விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன்,ராஜ்மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யாராவது ஒருவர் அல்லது இருவர் வெல்வார்களா, இல்லை பிரபலமல்லாதவர்கள் யாரேனும் அவர்களது தொகுதியில் கிடைத்த செல்வாக்கை வைத்து வெல்வார்களா என்று தெரியவில்லை.
திமுக 10 முதல் 11 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கணிப்புகள் சொல்கின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சென்னை முழுவதும் திமுக கூட்டணி வசமானது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் (100%) திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே (காங்கிரஸ் உட்பட) கைப்பற்றின. பலமான எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், அதிமுகவால் சென்னையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது.
மநீமையோ அல்லது நாதகவோ பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
2021-ல் 16-க்கு 16 என முழுமையாக வென்ற திமுகவுக்கு, இந்த முறை 10-11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என சர்வே கூறுவது சில இடங்களை இழக்க நேரிடும் என்பதைக் காட்டுகிறது.
கடந்த முறை ஒரு இடத்தைக் கூடப் பெறாத அதிமுக, இந்த முறை 2 முதல் 4 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவது அக்கட்சிக்கு ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.
அரசியலில் புதிதாகக் காலடி எடுத்து வைத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தலிலேயே தலைநகர் சென்னையில் 1 முதல் 2 இடங்களை வெல்லும் எனக் கணிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications