ரயிலில் படுக்கை வசதி பெட்டிகள் குறைகிறதா? AC கோச் எண்ணிக்கை அதிகமாகிறதா? பாமக அன்புமணி சொல்வதென்ன?
சென்னை: ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.படுக்கை வசதி உடைய பெட்டியை குறைத்து குளிர்சாதன பெட்டியை சேர்க்க ரயில்வே முடிவு செய்திருப்பதையும் கண்டிப்பதாக கூறி, காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், "தமிழகத் தொடர்வண்டித் திட்டங்களுக்கான நிதியை திருப்பி அனுப்பியதற்காக தெற்கு தொடர்வண்டித் துறையின் சார்பில் கூறப்பட்டுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை.

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு இப்போது ஒதுக்கப்படும் அளவில் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் கூட அவற்றை செயல்படுத்தி முடிக்க முடியாது.
எனவே, தமிழகத்திற்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும்.. திட்டச்செலவில் ஒரு பகுதியை ஏற்க வேண்டும். தமிழகத் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்? எந்தெந்தத் திட்டங்கள் எந்தெந்த ஆண்டில் நிறைவேற்றி முடிக்கப்படும்? என்பது குறித்த விவரங்கள் அடங்கிய கால அட்டவணையை தொடர்வண்டித்துறை வெளியிட வேண்டும்" என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.
எண்ணிக்கையை குறைக்க வேண்டாம்
இந்நிலையில், ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். படுக்கை வசதி உடைய பெட்டியை குறைத்து, குளிர்சாதன பெட்டியை சேர்க்க ரயில்வே முடிவு செய்ததையும் கண்டித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி..
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வண்டிகளில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது. தமிழ்நாட்டில் இயக்கப்படும் சேரன் விரைவுரெயில், சென்னை - திருவனந்தபுரம் மெயில், நீலகிரி விரைவு ரெயில், நெல்லை விரைவு ரெயில், பொதிகை விரைவு ரெயில் ஆகியவற்றில் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளைச் சேர்க்க தொடர்வண்டித்துறை முடிவு செய்திருக்கிறது.
படுக்கை வசதிகள்
ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த நடைமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. விரைவுத்தொடர்வண்டிகளில் 7 முதல் 9 வரை முன்பதிவு செய்யக்கூடிய படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும். இப்போது அவற்றில் இரு பெட்டிகளை நீக்கி விட்டு குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
இதனால், பயணம் செய்வோரின் எண்ணிக்கைக் குறையாது என்றாலும் கூட, மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது ஏழை மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துவதாக இருக்கும். தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கு செல்வதாக இருந்தாலும், பேருந்துகளில் வசூலிக்கப்படுவதைவிட தொடர் வண்டிகளில் படுக்கை வசதிக்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறைவு ஆகும்.
குளிரூட்டி வசதி
அதனால் தான் ஏழை மக்கள் தொடர் வண்டிகளில் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து கோவை செல்ல படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 325 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 3ஆம் வகுப்பு ஏசி பெட்டியில் இதே தொலைவுக்கு 835 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருநெல்வேலி செல்ல சாதாரண பெட்டிகளில் 395 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளில் 1,040 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி குளிரூட்டி வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும்.
சாதாரண வகுப்பு கட்டணம்
சாதாரண வகுப்புகளுக்கான கட்டணத்தைவிட குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளுக்கான கட்டணத்திற்கு குறைந்த அளவே மானியம் வழங்கப்படுகிறது. குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளை அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்டலாம் என்ற எண்ணத்தில் தான் தெற்கு தொடர் வண்டித்துறை இந்த இந்த முடிவை எடுத்துள்ளது.
தொடர் வண்டித்துறை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இதில் இலாப நோக்கம் இருக்கக் கூடாது. ஏழை மக்களை பாதிக்கும் வகையில், விரைவுத் தொடர் வண்டிகளில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை தொடர் வண்டித்துறை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications