ஏசி பெட்டியில் RAC டிக்கெட்டா? இனி உங்களுக்கும் கட்டாயம் போர்வை, கம்பளி.. ரயில்வே வாரியம் உத்தரவு
சென்னை: ரயில்களின் ஏசி பெட்டிகளில் முழு கட்டணம் செலுத்தி, இருக்கையை பகிர்ந்து பயணிக்கும் ஆர்.ஏ.சி. பயணிகளுக்கு இனி போர்வை மற்றும் தலையணை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த விதிமுறை நடைமுறையில் இருந்தாலும், ஊழியர்கள் அதை சரியாக பின்பற்றுவதில்லை என்ற புகார்களின் அடிப்படையில் தற்போது இந்த நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது
இந்திய ரயில்வேயை பொறுத்தவரை, தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களது நீண்ட தூர பயணங்களுக்காக விரைவு ரயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்.. அதிலும் கோடைக்காலம் மற்றும் குளிர்காலம் என அனைத்து பருவங்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்திய ரயில்வே நிர்வாகம்
அப்படி பயணிக்கும் பயணிகளில், டிக்கெட் முழுமையாக கன்பார்ம்டு செய்யப்பட்டவர்களுக்கு போர்வை, கம்பளி, தலையணை மற்றும் விரிப்புகள் அடங்கிய 'பெட்ரோல்' (Bedroll) கிட் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அதே ஏசி பெட்டியில் முழு கட்டணத்தையும் செலுத்தி, இருக்கையை பகிர்ந்து கொண்டு பயணிக்கும் ஆர்.ஏ.சி. அதாவது Reservation Against Cancellation பயணிகளுக்கு இந்த அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு வந்தது.. இதன்காரணமாக நைட் நேரங்களில் ஏசி பெட்டிகளில் போதிய போர்வை இல்லாமல் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
ஏசி பெட்டிகளில் போர்வை, தலையணை
பயணிகளின் இந்த அவதிக்கும், அசவுகரியத்துக்கம் இந்திய ரயில்வே வாரியம் இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.. ஒரு சூப்பரான உத்தரவையும் பிறப்பித்துள்ளது... அதன்படி, விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் ஆர்.ஏ.சி. பயணிகளுக்கும் இனி கட்டாயமாக போர்வை, கம்பளி மற்றும் தலையணை வழங்கப்பட வேண்டும் என அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இது தொடர்பான வழிமுறைகள் இருந்தாலும்கூட, ரயில்களில் அவை முறையாக பின்பற்றப்படவில்லை.. பல மண்டலங்களில் ஆர்.ஏ.சி. பயணிகளுக்கு போர்வை வழங்க ஊழியர்கள் மறுப்பதாகவும் ரயில்வே வாரியத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
ஆர்ஏசி பயணிகள்
இந்த புகார்களை பரிசீலித்த ரயில்வே நிர்வாகம், இப்போது அனைத்து மண்டல பொதுமேலாளர்களுக்கும் (General Managers) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஏசி பெட்டிகளில் பயணிக்கும் ஆர்.ஏ.சி. பயணிகள் ஒவ்வொருவருக்கும் உரிய போர்வை மற்றும் தலையணை கிடைக்கப் பெறுவதை மண்டல அதிகாரிகள் கள அளவில் நேரில் ஆய்வு செய்து கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்துவதில் எந்தவித தொய்வும் இருக்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏசி பெட்டிகளில் வசதிகள்
இது குறித்து ரயில்வே தொழிற்சங்கத்தின் முன்னாள் நிர்வாகி மனோகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஏசி பெட்டிகளில் பயணிக்கும் ஆர்.ஏ.சி. பயணிகள் தங்களின் பயணத்திற்காக முழுமையான கட்டணத்தையே செலுத்துகிறார்கள்.. இருந்தாலும் ரயில்களில் போர்வை மற்றும் கம்பளிகளின் பற்றாக்குறையை காரணம் காட்டி, ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் அவர்களுக்கு உரிய பெட்ரோல் பொருட்களை வழங்காமல் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
ஒரே சீட்டில் உட்கார்ந்து இரவெல்லாம் பயணிக்கும் இத்தகைய பயணிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்து வந்தது. இப்போது ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ள இந்த புதிய உத்தரவு, ஒப்பந்த ஊழியர்களின் அலட்சிய போக்கிற்கும் முற்றுப்புள்ளி வைப்பதுடன், ஆர்.ஏ.சி. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் ஒரு வரப்பிரசாதமாகவம் அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்
ரயில்வே வாரியத்தின் இந்த சூப்பர் நடவடிக்கையால், இனி விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் ஆர்.ஏ.சி. பயணிகள் அனைவரும் சிரமமே இல்லாத பயணத்தை வசதியாகவும் நிம்மதியாகவும் தொடர முடியும்..!!


Click it and Unblock the Notifications
