இருந்த ஒரு ஆறுதலும் போச்சே.. குறையும் மழை! வெப்பம் 100 டிகிரியை தாண்டுமாம் - சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை அடுத்த சில நாட்களில் குறையும் என சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 5, பொதுப்பணித்துறை (திருப்பூர்), காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் தலா 4, பார்வூட் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), செஞ்சி (விழுப்புரம்) தலா 3, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருவாலங்காடு (திருவள்ளூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), ஊத்துக்குளி (திருப்பூர்), கோயம்புத்தூர் தெற்கு, செய்யாறு (திருவண்ணாமலை) தலா 2, வளத்தி (விழுப்புரம்), பூண்டி (திருவள்ளூர்), சூலூர் (கோயம்புத்தூர்), திருப்பூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), TNAU கோயம்புத்தூர் தலா 1.
இன்று முதல் ஜூன் 7 வரை மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், இலட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள், மத்திய அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்றும் நாளையும் கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications