அவங்க பண்ணது ரொம்ப தப்பு.. நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு குரல் எழுப்பிய நடிகர் ஆதி!
சென்னை: கர்நாடகா காவிரி நதிநீர் பிரச்சினையின் போது பெங்களூர் சென்ற சித்தார்த்துக்கு நடந்த சம்பவத்தில் கன்னட அமைப்புகளுக்கு நடிகர் ஆதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு கடந்த 18-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை ஏற்க கர்நாடகா மறுத்துவிட்டது.
இந்த நிலையில் காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே பெரும் பதற்றம் நிலவி வந்தது.
மேலும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி கர்நாடகா முழுவதும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் கன்னட திரையுலகத்தினரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் திடீரென நிகழ்ச்சிக்குள் நுழைந்து பெரும் இன்னல்களை ஏற்படுத்தினர். இதனால் அங்கு சலசலப்புகள் எழுந்த நிலையில் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து டென்ஷன் ஆன சித்தார்த் அங்கிருந்து வேகமாக புறப்பட்டார். சித்தார்த்திற்கு ஆதரவாக பலர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா சரத்குமாரிடம் சித்தார்த் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நான் பார்க்கலைங்க என்றார். மீண்டும் சித்தார்த்துக்கு தமிழகத்தில் இருந்து நடிகர், நடிகைகள் யாரும் எந்த வித ஆதரவும் கொடுக்கவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ராதிகா, அப்படியா எனக்கு 3 நாட்களாக உடல்நலம் சரியில்லை. விளம்பரம் தொடர்பான பணிகளில் நான் பிஸியாக இருந்தேன். ஏதோ கேள்விபட்டேன் சித்தார்த் பற்றி- அவர் பொறுமையாக உட்கார்ந்து கொண்டிருந்தார் என ராதிகா தெரிவித்திருந்தார். அது போல் சென்னை மெரினா கடற்கரையில் உலக இதய தினத்தையொட்டி நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் கலந்து கொண்டனர்.
அப்போது ஆதி கூறுகையில் இதயத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். மன உளைச்சல் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடைய அன்பானவர்களுக்காக நம் இதயத்தை பாதுகாக்க வேண்டும். எப்போதும் நாம் பேசிக் கொண்டிருப்போம். நம்மால் முடிந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அப்போதுதான் இதயம் நன்றாக இயங்கும் என கூறினார்.
அவரிடம் சித்தார்த்துக்கு பெங்களூரில் நடந்த சம்பவம் குறித்து கேட்ட போது அவர் கூறுகையில் சினிமா, நடிகர் அதெல்லாம் தாண்டி நாம் எல்லோரும் எப்பவும் ஒன்றுதான். எல்லைகள் மாநிலங்களுக்கு பெயர்களை வைக்கவும் நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி நாம் அனைவரும் ஒன்று. அதிலும் சினிமா நடிகர்களை தடுப்பது தவறு. இந்த தவறை நாம் செய்தாலும் தப்புதான், அவங்க செய்ததும் தப்புதான் என்றார்.












Click it and Unblock the Notifications