மிஸ் யூ கேப்டன்.. விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல்.. தொலைபேசி மூலம் பிரேமலதாவிடம் இரங்கல்
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த விஜயகாந்த் தேமுதிககட்சியை தொடங்கினார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் விலகிய நிலையில் கட்சி நிகழ்ச்சிகளில் பட்டும் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் நேற்று காலமானார். சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டம் அதிகரித்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அங்கிருந்து விஜயகாந்த உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தான் நடிகர் அஜித் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் சுதீஷ் (பிரேமலதாவின் சகோதரர்) ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்த் மறைவுக்கு அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது சென்னையில் இல்லை. அவர் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருக்கிறார். தற்போது ’விடா முயற்சி’ என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் ‛அஜர்பைஜான்’ சென்றுள்ளார். இதனால் அவரால் நேரில் வர முடியவில்லை. இதையடுத்து அவர் விஜயகாந்தின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று நடிகர் விஜய், இன்று நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் உள்பட திரைத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications