Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி, உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84. சென்னை பாலவாக்கத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி என்கிற பி. சுப்பிரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்குமாரின் தாய் மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது: அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். இவ்வாறு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அது போல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமாரின் தாயார், மோகினி, வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.

இந்தத் துயரமான நேரத்தில், அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை பூர்வீகமாக கொண்டவர் அஜித் குமார். தமிழில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியதும் இவர் தமிழகத்தில் குடியேறினார். அஜித்தின் தாய் மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டவர் என சொல்லப்படுகிறது. தாய், தந்தை மீது அதிக பாசம் வைத்துள்ள அஜித், தான் கட்டிய வீட்டில் தனது தந்தை, தாய்க்கென ஒரு தளம், ஷாலினியின் தந்தை, தாய்க்கென ஒரு தளம் என கட்டி கூட்டு குடும்பமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
அஜித்தின் தந்தை தமிழ் பாலக்காடு ஐயர், தாய் கொல்கத்தாவை சேர்ந்த சிந்தி குடும்பம். இவர்களுக்கு அனில் குமார், அனுப் குமார், அஜித் குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் அஜித் குமார் நடிகர், இவர் கார் ரேஸ்களில் கலந்து கொண்டுள்ளார். கிரிக்கெட்டையும் ஆர்வமாக விளையாடி வருகிறார்கள். சினிமாவை காட்டிலும் கார் பந்தயங்களுக்கு அஜித் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications