2026ல் தமிழகத்தில் விஜய்யால் தாக்கம் ஏற்படுமா? அப்போ வரமாட்டாரா? ஆனந்தராஜ் இப்படி சொல்லியிருக்காரே
சென்னை: 2026 ஆம் ஆண்டு விஜய் அரசியலுக்கு வருவதால் என்னென்ன தாக்கம் ஏற்படும் என்ற கேள்விக்கு நடிகரும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தவருமான ஆனந்தராஜ் சில பதில்களை அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆனந்தராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: நான் அரசியல் பேச வேண்டாம் என நினைத்தேன். இன்றைய சூழலில் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் நான்தான் சீனியர். எனக்கு முன்னாடி அரசியலுக்கு வந்தவர்களில் சிலர் தவறிவிட்டனர்.

சிலர் விலகியிருக்கிறார்கள். நான் விலகியிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சில காரணங்கள் உங்களுக்கும் தெரியும். அரசியலுக்கு வருவோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசியதை நான் பார்த்தேன்.
அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவருடைய விருப்பம். வந்தால் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். வரவில்லை என்றால் அவர் எனக்கு நல்ல நண்பராக இருப்பார். அவர் பேசிய கருத்துகள் அவர் எந்த இடத்திற்கு செல்வதற்காக பேசியதாக இருக்கலாம்.
2026 ஆம் ஆண்டு விஜய்யின் வருகையால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா என கேட்கிறீர்கள். விஜய் கட்சியை தொடங்கிவிட்டார். அவர் களத்திற்கு வரட்டும், பிறகு நான் சொல்கிறேன். நான் தினம் தினம் அரசியல் பேசி இருந்த நிலையில் தற்போது எதையும் பேசாமல் மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறேன். நான் எதை பேசினாலும் அது மற்றவர்களுக்கு சாதகமாக ஆகிவிடக் கூடாது என்ற எண்ணம் எனக்கு உள்ளது.
நான் ஒருவரை குறைச் சொல்லி பேச ஆரம்பித்தால் அது மற்றவர்களுக்கு சாதகமாகிவிடும். மற்றவர்களை குறை சொன்னால் அது இன்னொருத்தவருக்கு சாதகமாகிவிடும். அரசியலில் வெற்றிடம் ஏதும் இல்லை. நடக்க வேண்டியது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது எந்த கட்சியினருக்குமே தெரியாதா? என்னை விட்டால் நிறைய பேசிவிடுவேன், அது வேண்டாம் என ஆனந்தராஜ் தெரிவித்தார். மேலும் கள்ளச்சாராய மரணத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிதியுதவி கொடுத்தது குறித்து கேள்விக்கு ஆனந்தராஜ் நோ கமென்ட்ஸ் என தெரிவித்தார்.
ஆனந்தராஜ், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர். வில்லன் நடிகராக பல திரைப்படங்களில் மிரட்டி இருந்தாலும் தற்போது சில படங்களில் அவர் காமெடி கேரக்டர்களில் நடித்து வருகிறார். விஜயகாந்தின் பெரும்பாலான படங்களில் தீவிரவாதியாகவும் கொள்ளையனாகவும் தேச துரோகியாகவும் நடித்திருந்தார். அவர் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications