"தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்.." முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பிறந்த நாள் அன்று ஸ்டாலின் தொண்டர்களைச் சந்திக்காத நிலையில், இன்று அவர் தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கமல்
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், என் மனதிற்கு உகந்த நண்பர். என்னைக் கலைஞானி என்று அழைத்து அன்பு காட்டிய கருணாநிதியின் மகன். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்திற்கும் செயலுக்கும் வலுவூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தன்னை விரும்புபவர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக, தனது சுயசரிதையை "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் பல்வேறு பாகங்களாக வெளியிட இருக்கிறார்.

சுயசரிதை
பிறந்தது முதல் மிசா கைதியாகச் சிறை சென்றது வரையிலான 23 வருடங்கள் இந்த முதல் பாகத்தில் இடம் பிடித்தாக அறிகிறேன். சுய சரிதை என்றால் தொட்டால் சுடவேண்டும். இது குட்டிச் சூரியனின் சரிதை! தகிக்காமல் இருக்காது. திருமணம் ஆன ஐந்தே மாதங்களில் மிசா கைதியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் பட்ட இன்னல்களை சிட்டிபாபுவின் சிறை டைரி, தோழர் தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள் ஆகிய நூல்களில் ஏற்கனவே வாசித்து கண் கசிந்து இருக்கிறேன்.

உழைத்து வந்தவர்
அவர் இன்று பெற்றிருக்கும் உயரம், யானை மாலை போட்டு வந்ததல்ல. கருணாநிதியின் மகன் என்றாலும், கால் தேய உழைத்துத்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். சொல்லப்போனால் ஸ்டாலினை பொருத்தவரை கருணாநிதி, தன் மைந்தனைத் திணிக்கிறார் என்ற எண்ணம் எவருக்கும் வரும் வகையில் நடந்து கொள்ளவில்லை என்பதே வரலாறு! இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் என்ற நிலை வந்தபோது முதல் முதலில் எதிர்த்தவர் கருணாநிதி தான்.

தவிர்க்கமுடியாத அரசியல் தலைவர்
அதேபோல ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட போது எதிர்ப்பு தெரிவித்து, அவருக்குப் பதிலாக உசேனை முன்மொழிந்த வரும் கருணாநிதிதான் என்பது சிறு முன்னுதாரணங்கள். இந்துத்துவ கொள்கைகளைத் தேசம் எங்கும் திணிக்க முற்படுகையில். அதிகாரத்தை தங்கள் வசம் குவித்து கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குகையில் தெற்கிலிருந்து ஒலிக்கும் முக்கிய குரல்களில் ஒன்றாகவும் ஸ்டாலின் திகழ்கிறார். தென்னிந்தியாவின் தவிர்க்கமுடியாத அரசியல் தலைவராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications