நெக்ஸ்ட் நெக்ஸ்ட்.. அஜித்குமார் பற்றிய கேள்விக்கு நடிகர் ஆர்யா சொன்ன பதிலால் விளாசும் நெட்டிசன்கள்
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கொடூரமாக தாக்கி கொன்றனர். அஜித்குமாரை தாக்கிய தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டையே இந்த உலுக்கிப்போட்டுள்ள இந்த சம்பவம் குறித்த கேள்விக்கு நடிகர் ஆர்யா பதிலளிக்க மறுத்து புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாட்டில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள ஒரு சம்பவம் என்றால் அது அஜித்குமார் கொலை வழக்கு தான். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் அஜித் குமார். இவருக்கு வயது 27.

கடந்த மாதம் 27 ம் தேதி சிவகாமி என்பவர் தனது மகள் நிகிதாவுடன் காரில் கோவிலுக்கு வந்தார். சிவகாமியால் நடக்க முடியாது. இதனால் அவருக்கு வீல்சேர் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வேளையில் அஜித் குமாரிடம் கார் பார்க் செய்யும்படி சாவியை கொடுத்து சென்றார். அஜித்குமாருக்கு கார் ஓட்ட தெரியாது. இதனால் அவர் இன்னொருவரை உதவிக்கு அழைத்து காரை பார்க் செய்துவிட்டு சாவியை ஒப்படைத்தார்.
இந்த வேளயைில் காரில் இருந்த 9.5 சவரன் நகை மற்றும் ரூ.2,500 காணவில்லை என்று நிகிதா கூறினார். இதுதொடர்பாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் போலீசார் அஜித் குமாரை பிடித்து விசாரித்தனர். எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யாமல் அஜித்குமாரை தனிப்படை போலீசார் கோவிலின் மாட்டு தொழுவத்தில் வைத்து கொடூரமாக தாக்கினர். இதில் அவர் இறந்தார்.
5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரனையை சிபிஐ வசம் ஒப்படைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நீதி விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் சினிமா நடிகர், நடிகைகள் இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அடித்து கொன்றனர். அப்போது அதிமுக ஆட்சி நடந்தது. அந்த சமயத்தில் திரைத்துறையினரும் பலரும் சாத்தான்குளம் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து அரசை விமர்சனம் செய்தனர்.
ஆனால் தற்போது அஜித்குமாரை போலீசார் அடித்து கொன்றதற்கு ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கொதித்தெழுத்த நடிகர், நடிகர்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. திமுக ஆட்சி என்பதால் அவர்கள் மவுனம் காப்பதாக விமர்சனங்களை பல்வேறு தரப்பினர் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் நடிகர் ஆர்யா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர்,‛‛சமூக வலைதளங்களில் என்ன கேள்வி போய் கொண்டிருக்கிறது (அஜித்குமார் மரணம்) என்று நீங்கள் பார்த்து இருப்பீர்கள். சினிமா துறையில் இருப்பவர்கள் கடந்த முறை (ஜெயராஜ் - பெனிக்கஸ் கொலை) நிறைய பேசினார்கள். இந்த முறை யாரும் பேசவில்லை'' என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஆர்யா, ‛‛நெக்ஸ்ட் அண்ணா.. நெக்ஸ்ட்..'' எனக்கூறி இந்த கேள்விக்கான பதிலை தவிர்த்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதனை பார்க்கும் பெரும்பாலான நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர் எல்லா விஷயத்துக்கும் சினிமாக்காரர்கள் பதில் அளிக்க வேண்டுமா? என்று கேள்வி கேட்டு ஆர்யாவுக்கு சப்போர்ட்டாக இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications