மம்முட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மானின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்.. அன்று நள்ளிரவு நடந்தது என்ன?
சென்னை: நடிகர் துல்கர் சல்மானின் கார் ஓட்டுநர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஓட்டுநர் நடிகர் துல்கரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல அவரது வீட்டிலேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவரின் மர்ம மரணம் குறித்து சென்னை அபிராமபுரம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ காதல் கண்மணி, சார்லி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 36 வயதாகும் இவர் பின்னணி பாடகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் தொழிலதிபராகவும் அறியப்படுகிறது.
இவர் தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். மம்முட்டியை போல் மலையாளம் கலந்த தமிழில் இவர் பேசுவதால் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் 4 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் கேரளா மாநில பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

தமிழில் அடுத்தடுத்த படங்கள்
இவருக்கு தமிழில் அடுத்தடுத்த படங்கள் கிடைப்பதால் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். துல்கர் சல்மான் தற்போது சீரா ராமம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஹனு சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளார்களள். இது தமிழ், தெலங்கு, மலையாள மொழிகளில் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இவரது வீட்டில் வடபழனி ஜவஹர்லால் நேரு தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (51) என்பவர் கடந்த ஒரு மாதமாக ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

நடிகர் துல்கர் சல்மான்
இந்த நிலையில் நேற்று அதிகாலை நடிகர் துல்கர் சல்மானை விமான நிலையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதால் அவர் தனது வீட்டிற்கு செல்லாமல் துல்கர் சல்மானின் வீட்டில் ஒரு அறையில் தங்கியிருந்தார். இதையடுத்து அவர் நேற்று முன் தினம் இரவு பாஸ்கர் பீட்சாவையும் கோகோ கோலாவையும் ஆன்லைனில் ஆர்டர் செய்ததாக தெரிகிறது.

இருமல் மூச்சுத் திணறல்
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் பாஸ்கருக்கு திடீரென அதிகளவில் இருமல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்த பணியாளர் ஸ்ரீஜித் என்பவர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அபிராமபுரம் போலீஸார்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அபிராமபுரம் போலீஸார் பாஸ்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பீட்சா, குளிர்பானம்
இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து வருகிறது. அவர் பீட்சா, குளிர்பானத்துடன் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அவருடைய செல்போனை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். டிரைவரின் உயிரிழப்பால் துல்கர் சல்மான் மிகுந்த வேதனையில் உள்ளாராம். பொதுவாக இரவு ஜங்க் உணவுகளை உண்ண வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. அதிலும் ஜங்க் உணவுடன் அவர் குளிர்பானத்தையும் அருந்தியுள்ளார். இது போன்ற கொழுப்பு சத்து, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள ஜங்க் உணவுகளை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இவை மாரடைப்பு தூண்டக் கூடிய ஆபத்துடையவை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications