கடுப்பான பகத் பாசில்.. சாதி ஆதரவாளர்களுக்கு “நோஸ் கட்”- ரத்னவேல் பேஸ்புக் கவர் படத்தையே தூக்கிட்டாரே
சென்னை: மாமன்னனின் வில்லன் ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதி ஆதரவாளர்கள் கொண்டாட தொடங்கிய நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பகத் பாசில் தனது பேஸ்புக் கவர் படத்தையே நீக்கி இருக்கிறார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் மாமன்னன். வசூல் ரீதியாகவும், விமர்சன கண்ணோட்டத்தில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டிலும், அரசியல் களத்திலும் பட்டியலின மக்களுக்கு எதிராக நிகழும் ஒடுக்குமுறைகளை தோலுரித்துக் காட்டி உள்ளது இப்படம். அனைத்து திரையரங்குகளிlலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த படத்தில் மாமன்னனாக நடித்த வடிவேலுவின் கதாபாத்திரம் மற்றும் உதயநிதியின் நடிப்பு அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் இப்படம் நெட்பிளிக்சில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. உலகளவில் டிரெண்டிங் நம்பர் 1 ல் இப்படம் இருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் திரையரங்குகளில் இப்படம் வெளியானபோது எப்படி வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டதோ அதேபோல் ஓடிடியில் வெளியான பின் வில்லன் பகத் பாசிலின் நடிப்பு பேசப்பட்டது.
கண்களிலேயே மொத்த உணர்வுகளையும் கொண்டு வந்து கொட்டும் அவரது அசாத்திய ஆற்றலால் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்டு வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார் பகத் பாசில். இப்படி பகத் பாசிலின் நடிப்புத் திறனை சிலாகித்து சினிமா ரசிகர்கள் பதிவிட்டு வரும் நிலையில், மறுபக்கம் சாதி பெருமை பேசுபவர்கள் பகத் பாசில் நடித்த சாதி வெறிப்பிடித்த வில்லன் கதாபாத்திரத்தை கொண்டாடத் தொடங்கினார்கள்.
ரத்னவேல் கதாபாத்திரத்தின் வெட்டி, ஒட்டப்பட்ட காட்சிகளை வைத்து பேக்கிரவுண்டில் சாதி பெருமை பேசும் பாடல்களை ஓடவிட்டு சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர். சமூக நீதி மற்றும் பட்டியலின மக்களின் வலிகளை படத்துக்கு படம் பேசி வரும் மாரி செல்வராஜை பழிவாங்குவதாக நினைத்து இப்படி ஒரு வேலையை பெரும்பாலானோர் செய்தனர்.
இதனால் கடந்த சில நாட்களாகவே பகத் பாசில், ரத்னவேல் கதாபாத்திரம், மாமன்னன் திரைப்படம் போன்றவை சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தன. மீம் கிரியேட்டர்கள், யூடியூப் சேனல்களும் டிரெண்டிங்கிற்காக இந்த சாதிய மனப்பான்மையை ஊக்குவிக்கும் மீம்கள் வீடியோக்களை வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது.
சமூக நீதியை வலியுறுத்தும் மாமன்னன் திரைப்படத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் பொறுப்பின்றி நெட்டிசன்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு மத்தியில் பகத் பாசில் தனது பேஸ்புக் கவர் படத்தில் ரத்னவேல் கதாப்பாத்திர தோற்றத்தை வைக்க, அதையும் சாதி ஆதரவாளர்கள் பகிர்ந்து பயர் விட்டனர்.
இந்த நிலையில் தற்போது பேஸ்புக் கவரில் இருந்த ரத்னவேல் கதாபாத்திரத்தின் படத்தை பகத் பாசில் நீக்கி இருக்கிறார். தமிழ்நாட்டில் ரத்னவேல் கதாபாத்திரம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்ந்தே அவர் அப்படத்தை நீக்கியதாக கூறுகிறார்கள். இதற்கு மாற்றாக அவர் படத்தையும் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications