தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்!
சென்னை: தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து பயணித்து வந்த நடிகர் மீசை ராஜேந்திரன் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன் தேமுதிகவில் சீட் வழங்காத நிலையில், அதிமுகவில் இணைந்து தேர்தல் பணியாற்றினார். இந்த நிலையில், இன்று, ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்துள்ளார்.
அம்பாசமுத்திரம் எம்எல்ஏவான இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சர்கள் செங்கோட்டையன், என்.ஆனந்த் முன்னிலையில் இன்று இணைந்தார். அவருடன் நடிகர் மீசை ராஜேந்திரன், அதிமுக செய்தி தொடர்பாளர் அதி வீரபாண்டியன் ஆகியோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மீசை ராஜேந்திரன். பல திரைப்படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்துள்ளார். இவருக்குத் திரையுலகில் களம் அமைத்துக் கொடுத்தவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதன் காரணமாக, கடந்த 31 ஆண்டுகளாக விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக அவரது ரசிகர் மன்றத்திலும், கட்சி தொடங்கப்பட்ட பின் கடந்த 21 ஆண்டுகளாக தேமுதிகவிலும் பயணித்து வந்தார்.
தேமுதிகவில் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து வந்தார் மீசை ராஜேந்திரன். விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்று வந்த ராஜேந்திரன், 3 தேர்தல்களில் போட்டியிடவும் வாய்ப்பு பெற்றார். இருப்பினும், விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு கட்சியில் தனக்கான முக்கியத்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டதாக அவர் உணர்ந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மீசை ராஜேந்திரன் சீட் எதிர்பார்த்த நிலையில், தலைமை அவருக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ராஜேந்திரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதுகுறித்து மீசை ராஜேந்திரன், "விஜயகாந்த் மீது கொண்ட பற்றால் பல ஆண்டுகாலமாக எனது உழைப்பை நல்கினேன். ஆனால், தற்போது விசுவாசத்திற்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படுவதில்லை. மிகுந்த மனவருத்தத்துடன் தேமுதிகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் மீசை ராஜேந்திரன். தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. சிவி சண்முகம் - வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தனி அணியாகப் பிரிந்தனர்.
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தவெகவில் இணைந்துள்ளார். அவருடன் நடிகர் மீசை ராஜேந்திரன், அதிமுக செய்தி தொடர்பாளர் அதி வீரபாண்டியன், சசிரேகா ஆகியோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications