“அற்புதமான ஐடியா” … ’நச்’ என்று கதை சொன்ன நாசர்.. அதற்கு ஆதரவு தந்த சீனு ராமசாமி
சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை புதிதாகத் தொடங்கி உள்ள 'வாசிப்பு இயக்க'த்திற்கு திரைத்துறையைச் சார்ந்த நடிகர் நாசரும் இயக்குநர் சீனு ராமசாமியும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த முயற்சி கல்வித் துறையில் ஒரு மைல் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையானது அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாபெரும் 'வாசிப்பு இயக்கம்' ஒன்றைத் தொடங்கி உள்ளது. இதற்காக விதவிதமான 53 தலைப்புகளில் கதை புத்தகங்களை அச்சடித்து மாணவ செல்வங்களுக்கு வழங்கியுள்ளது.

இதற்கான தொடக்கவிழா சமீபத்தில் துறையூர் தொகுதியில் உள்ள பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. அந்த இயக்கத்தை ஆதரித்துதான் நாசரும் சீனு ராமசாமியும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றில் நடிகர் நாசர், "சிறு வயதாக இருந்தபோது எனக்கு விளையாடுவதற்கு அதிகம் நேரம் கிடைத்தது. அன்றைக்கு எல்லாம் இன்றுள்ளதைப் போல டிவி, ஸ்மார்ட் போன், யூடியூப், கூகுள் என்ற வசதிகள் யாவும் இருந்ததில்லை. ஊருக்கு 2 தியேட்டர்ஸ் இருக்கும். தெருவில் மொத்தமாகச் சேர்த்து 4 வீடுகளில் மட்டும் ரேடியோ இருக்கும், அவ்வளவுதான்.
அந்தக் காலத்தில் எங்களுக்குப் பூங்காக்கள் எல்லாம் தேவைப்படவில்லை. ஏனென்றால், எங்கள் ஊரே பூங்காதான். எல்லா தெருக்களுமே விளையாட்டுத் திட்டல்கள்தான். ஒரு சந்தில் புகுந்து இன்னொரு சந்துக்குப் போய் ஒளிந்து, இப்படி ஓடி ஆடி களைத்துப்போய் உடம்பில் மண்ணும் மாசுமாக வீட்டுக்கு வந்தால், அம்மா செல்லமாக 2 தட்டுத் தட்டி குளிப்பாட்டி விடுவார்கள்.

எங்கள் பள்ளிக்கூடம் நடந்து போகின்ற தூரம்தான். அதாவது, பள்ளிக்கூடம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அது எங்களுக்கெல்லாம் நடந்து போகிற தூரம்தான். இப்போது உங்களை எல்லாம் பார்த்தால் வருத்தமா இருக்கிறது.
காலையில் எழுந்து, மூட்டை மூட்டையா புத்தகங்களைத் தூக்கிச் சுமக்க வேண்டும், பேருந்தில் பல மைல் போக வேண்டும், தூங்கி வழிய வேண்டும். தூங்கி எழுந்து மீண்டும் டீச்சர் சொல்வதைக் கேட்க வேண்டும், படிக்க வேண்டும்.. அப்பப்பா.. எவ்வளவு மன அழுத்தம்?
அந்த மன அழுத்தத்தைப் போக்க வேண்டும் என்றுதான் தமிழ்நாடு அரசு ஒரு அருமையான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அது என்ன தெரியுமா? 'வாசிப்பு இயக்கம்'. உங்கள் பாடப் புத்தகத்தில் இருக்கின்ற கட்டாயமாகப் படிக்கவேண்டிய பாடங்களோடு சேர்த்து, உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி, கற்பனை வளத்தைக் கொடுக்கக் கூடிய புத்தகங்களையும் படிக்க வைக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே ஒரு வாசிப்பு இயக்கம்.

இந்த வாசிப்பு இயக்கத்தில் நீங்கள் படிப்பதற்காகப் பல அறிஞர்கள் எல்லாம் கூடி, குழந்தைகளுக்கு எது மன வலிமை தரும்? எது புத்துணர்ச்சியைத் தரும்? என உட்கார்ந்து பேசி, விவாதித்துப் பல புத்தகங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.
எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான புத்தகங்களை அவர்கள் கொடுக்கவில்லை. படிப்படியாக முன்னேறுவதைப் போல, நுழை, நட, ஓட, பற எனப் பல தரங்களாகப் புத்தகங்களைப் பிரித்திருக்கிறார்கள். நீங்கள் உங்களுக்கு ஏற்ற மாதிரியான புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்கலாம்.
வருங்கால சமுதாயம் எப்போதும் மகிழ்ச்சியாக, தைரியமாக மனவலிமையோடு இருக்க வேண்டும். சுயமாக சிந்திக்கக் கூடிய, சுயமாக பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய பலமான சமுதாயமாக மாற வேண்டும். அதற்குத்தான் இந்த வாசிப்பு இயக்கம். அதற்குத்தான் இந்தப் புத்தகங்கள். அரசு அறிமுகம் செய்துள்ள இந்த வாசிப்பு இயக்கம் ஒரு அற்புதமான ஐடியா" என்று ஒரு குழந்தையைப் போலவே நடித்துக் காண்பித்துப் பேசியுள்ளார்.

அடுத்த வீடியோவில் பேசிய சீனு ராமசாமி, "என்னைப்பற்றி நான் அதிகம் பெருமைப்படுகின்ற விஷயம் என்ன தெரியுமா? நான் ஒரு அரசுப் பள்ளி மாணவன். அதுதான் எனக்குக் கிடைத்த முதல் பெருமை.
அரசுப் பள்ளிதான் எனக்கு நிறையக் கற்றுத்தந்தது. மாணவர்களாகிய நாங்கள் எல்லோரும் பேச்சுப் போட்டிக்குப் போவோம். அதற்கு ஆசிரியர்களே எழுதித் தருவார்கள். அதை அப்படியே மனப்பாடம் செய்வோம். இதில் ஏதாவது சந்தேகம் வந்தால் பள்ளி நூலகத்திற்குப் போய் அதற்கான விடை உள்ள புத்தகத்தைத் தேடி எடுத்துப் படிப்போம்.
இப்படித்தான் எங்களுக்கு வாசிப்பு பழக்கம் வந்தது. ஆனால், இன்றைக்கு அரசாங்கம் மாணவர்களாகிய உங்களுக்கு வாசிக்கின்ற பழக்கம் வரவேண்டும் என்பதற்காகவே 'வாசிப்பு இயக்கம்' தொடங்கி இருக்கிறது.

பாடப் புத்தகங்களைத் தாண்டி நீங்கள் உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பல விசயங்களைச் சின்ன சின்ன கதைகள் வழியாக, நல்ல ஓவியங்களுடன் தலைவர்கள் பற்றிய வரலாறு, விஞ்ஞானம் சார்ந்த கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.
அதை எல்லாம் படித்து நீங்கள் தெரிந்து கொண்டால், இந்த உலகம் அவ்வளவு நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கும். அழகானதாக இருக்கும். நீங்கள் படிக்கப் படிக்க உங்கள் கற்பனை சிறகுகள் விரியும். அப்புறம் நீங்கள் வானத்தில் பறக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆகவே நீங்கள் கதைப் புத்தகங்களைப் படிக்க வேண்டும்" என உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.
வாசிப்பை நேசிப்போம்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications