சென்னைக்கு வரும் நடிகர் பவன் கல்யாண்.. பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்! யாருக்கு தெரியுமா?
சென்னை: ஆந்திராவில் போட்டியிடும் நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், சென்னையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆந்திராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திராவில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவை தனித்து களமிறங்க உள்ளன. மறுபுறம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் வரும் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் ஆந்திராவில் மும்முனை போட்டி நிலவ இருக்கிறது.
175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்து போட்டியிடுகிறது. பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது.
ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்திற்கு ஆதரவாக வரும் 16ஆம் தேதி சென்னையில் பிரச்சாரம் செய்கிறார் பிரபல தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண்.
சென்னையில் 16ஆம் தேதி மாலை நடக்கும் பாஜக பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகிறார் பவன் கல்யாண். ஆந்திர சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் சென்னை வருவதையொட்டி அவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் ட்விட்டரில் பவன் கல்யாண் வருகையை அவர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications