எம்ஜிஆர் சொன்ன அந்த வார்த்தை.. அப்படியே கட்டுப்பட்டார் என் அப்பா.. அவரை போய்.. பிரபு வேதனை
சிவாஜி கணேசனின் அரசியல் வருகை குறித்து நடிகர் பிரபு விளக்கம் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "எம்ஜிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காகதான் என் அப்பா அரசியலில் இறங்கினார். கட்சியை ஆரம்பித்தார்... தோற்போம் என தெரிந்தேதான் அன்று கூட்டணியும் வைத்தார்... ஆனால் உண்மை என்னவென்றே தெரியாமல், என் அப்பாவின் அரசியல் பிரவேசம் விமர்சிக்கப்படுவது வருத்தமளிக்கிறது" என்று நடிகர் பிரபு கவலையுடன் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் அனைவரையும் ஜெயித்த சிவாஜி கணேசன் அரசியலில் தோற்று போய்விட்டார் என்று பொதுவாக சொல்வது உண்டு. ஆரம்பத்தில் திராவிடர் இயக்கத்தின் பரிச்சயமும், பிரபலமுமான முகம்தான் சிவாஜி கணேசன்!! திருப்பதி போய் வந்தார்.. அவ்வளவுதான்... இந்நிகழ்வு பெரிய சலசலப்பை ஏற்படுத்த, 1961-ல் தன்னை காங்கிரஸில் இணைத்து கொண்டார் சிவாஜி.
அளவுக்கு அதிகமாக நேருவையும், காமராஜரையும் விரும்பினார். பற்று வைத்த நேரு மறைந்ததும், காமராஜர்தான் தனக்கு அனைத்தும் என்றே இருந்தார். 1967ல் காமராஜ் தோற்றபோதும் சரி, 1969ல் காங்கிரஸ் 2-ஆக பிரிந்தபோதும் சரி, காமராஜரை தவிர வேறு யாருக்குமே தன் மனதில் இவர் இடம் தரவில்லை.

தோற்றார்
காலப் போக்கில், தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை தொடங்க.. 1989 சட்டமன்ற தேர்தலில் திருவையாறு தொகுதியில் நின்று தோற்று போக... இப்படியே அவரது அரசியல் நகர்ந்தது. சொந்தக் கட்சிக்காக சொத்துக்களை அதிக அளவு இழந்தவர் சிவாஜி கணேசன் என்றுகூட பேசப்பட்டது. அதாவது சிவாஜியால் எம்ஜிஆர் ஆக முடியாது என்பதை சிவாஜியே தெளிவாக நிரூபித்து விட்டுப் போய் விட்டார் என்பதைதான் இந்த அரசியல் நிகழ்வு தமிழக மக்களுக்கு உணர்த்தியது.

வெற்றிடம்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடியாரிடம் "தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கமல், ரஜினி கூறுகின்றனரே?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிளித்த முதல்வர் ''வெற்றிடம் என்று சொன்னவர் ஏன் 2 தேர்தலில் போட்டியிடவில்லை? போட்டியிட்டிருக்கலாமே?? கமலுக்கு வயதாகிவிட்டது.. மிகப்பெரிய நடிகர் சிவாஜி கணேசனுக்கு தேர்தலில் என்ன நிலை ஏற்பட்டது என அனைவருக்கும் தெரியும். அவரை விட மிகச்சிறந்த நடிகர் இல்லை. எம்ஜிஆருக்கு அடுத்த கட்டத்தில் சிவாஜி இருந்தார். சிவாஜி நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும்" என்று தெரிவித்திருந்தார்.

சலசலப்பு
கமல், ரஜினி பற்றின கேள்விக்கு பதில் சொல்லும்போது, இறந்துபோன சிவாஜியை இழுத்து கொண்டு வந்து உதாரணம் காட்டி முதல்வர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இது சிவாஜி குடும்பத்தினரை மிகவும் காயப்படுத்தி இருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது. அது உண்மைதான் என்பதை நேற்று நடந்த கமல் பாராட்டு விழாவில் பிரபுவின் பேச்சு உறுதிப்படுத்தியது.

பிரபு பேச்சு
சென்னையில் கமலுக்கு நடந்த விழாவில் பிரபு பேசும்போது சொன்னதாவது: "எம்ஜிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காகதான் என் அப்பா அரசியலில் இறங்கினார். சகோதரன் என்ற பூரண நம்பிக்கையில் எம்ஜிஆர் அமெரிக்காவில் அன்று வேண்டுகோள் வைத்தார். அந்த வார்த்தையை தட்டாமல் அரசியலில் இறங்கி, கட்சியை ஆரம்பித்தார் என் அப்பா.

வேதனை
எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மா அணியுடன் தோற்போம் என தெரிந்தேதான் அன்று கூட்டணியும் வைத்தார். மற்றபடி அரசியலில் பெரிய பதவிகளுக்கான ஆசை என் அப்பாவுக்கு என்றுமே இருந்ததில்லை. ஆனால் உண்மை என்னவென்று தெரியாமல் இப்போதும் என் அப்பாவின் அரசியல் பிரவேசம் விமர்சிக்கப்படுவது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்தார்.

வருத்தம்
பிரபு யார் பெயரையும் குறிப்பிட்டு இப்படி சொல்லவில்லை, யாரையும் காயப்படுத்தியும் சொல்லவில்லை.. என்றாலும் சிவாஜி கணேசன் எந்த சூழலில் அரசியலில் சேர்ந்து கட்சியை ஆரம்பித்தார் என்ற விளக்கத்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications