பாஜகவுக்கு ‘டாட்டா’.. ஐஜேகேவில் இணைந்த ஆர்.கே.சுரேஷ்.. சேர்ந்ததுமே கட்சியில் மிக முக்கிய பதவி!
சென்னை: பாஜகவில் இருந்து விலகி, அதன் கூட்டணி கட்சியான ஐஜேகேவில் இணைந்துள்ளார் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ். இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்த ஆர்.கே.சுரேஷ், அக்கட்சியின் அகில இந்திய அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தயாரிப்பாளராக இருந்து பின்னர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஆர்கே சுரேஷ், சில நாட்களிலேயே பாஜகவில் இணைந்து முக்கிய பொறுப்பை பெற்றார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவராக இருந்தார். அண்ணாமலை கடந்த 2022 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்கு பசும்பொன் சென்றபோது, ஆர்கே சுரேஷ், "வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க" என முழக்கமிட்டதோடு அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

இந்த சூழலில் தான் ஆருத்ரா கோல்டு ஃபைனான்ஸ் மோசடி தொடர்பான வழக்கில் சிக்கி பல மாதங்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். ஆர்.கே.சுரேஷ், பாஜகவில் இணைய, மோசடி பணம் கோடி கோடியாக கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று சென்னைக்கு திரும்பினார்.
இதனையடுத்து போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆருத்ரா விவகாரத்துக்குப் பிறகு பாஜகவில் ஆர்.கே.சுரேஷுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர் தற்போது பாஜகவில் இருந்து விலகி இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐஜேகே கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பச்சைமுத்து, பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் 'தாமரை' சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய ஆர்.கே.சுரேஷ், அதன் கூட்டணி கட்சியான ஐஜேகேவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐஜேகே கட்சியில் இணைந்த ஆர். கே.சுரேஷ்க்கு முக்கிய பொறுப்பு வழங்கி உள்ளார் அக்கட்சி தலைவர் ரவி பச்சமுத்து. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் ஆணைக்கிணங்கவும் பரிந்துரையின் பேரிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் (National Organizing Secretary) பொறுப்பிற்கு R.K. சுரேஷ் நியமிக்கப்படுகிறீர்கள். இப்பொறுப்பை ஏற்கும் நீங்கள், பாரிவேந்தர் வழிகாட்டுதலுக்கு இணங்க, நமது கட்சியின் கொள்கைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு கட்சியை வளர்க்க பாடுபட வேண்டுமென தெரிவித்துக்கொண்டு, தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.
மேலும், இப்பொறுப்பினை ஏற்கவுள்ள தாங்கள், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பொறுப்பாளர்களை நியமிப்பதோடு, அதிகளவில் உறுப்பினர்களையும் சேர்க்கவேண்டும். இந்தச் செயல்பாட்டினை அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்குள் நீங்கள் நிறைவேற்றினால், உங்கள் பதவி நிரந்தரமாகும் என்பதோடு, மூன்று வருடங்களுக்கு உங்கள் பதவி நீட்டிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications