ஸ்மார்ட் Tasmac.. விஜய் அரசின் புதிய சிஸ்டம்.. என்ன பெரிய பெங்களூர்.. இனிமேல் பாருங்க!
தமிழ்நாட்டில் ஒருபக்கம் 717 மதுபான கடைகளை மூடினாலும், மதுபானம் மூலம் அதிக வருவாய் ஈர்க்கும் வழிவகையை தேடிக்கொண்டு தான் இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலத்திற்கு பிரபலமான மதுபானங்களை அருந்துவதற்காக செல்லும் மக்களை தக்கவைக்கும் வகையில் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது விஜய் தலைமையிலான அரசு.
தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை அதிகரிக்கவும், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நுகர்வோர்களை ஈர்க்கவும், டாஸ்மாக் கடைகளில் புதிய மதுபான மற்றும் பீர் பிராண்டுகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, டாஸ்மாக் கடைகளின் தோற்றம் மற்றும் வசதிகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏன் புதிய பிராண்டுகள்?
தமிழ்நாட்டில் தற்போது விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் சில உள்ளூர் பிராண்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், நுகர்வோருக்கு விருப்பத் தேர்வுகள் குறைவாக இருப்பதாகவும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதன் விளைவாக, பலர் பீர் மற்றும் பிற மதுபானங்களை வாங்குவதற்காக புதுச்சேரி மற்றும் பெங்களூரு போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்வதாக அரசுத் தரப்பு மதிப்பிடுகிறது.
இந்தப் போக்கு டாஸ்மாக்கின் வருவாயை பாதிப்பதாகக் கூறப்படும் நிலையில், பிற மாநிலங்களில் பிரபலமாக விற்பனையாகும் பிராண்டுகளை தமிழக சந்தையிலும் கொண்டு வர அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
குறிப்பாக பீர் பிரிவில் உள்ளூர் பிராண்டுகளின் ஏகபோக நிலையை குறைத்து, அதிகமான தேர்வுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளின் தோற்றம்
புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், டாஸ்மாக் கடைகளின் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது சுமார் 250 சதுர அடியில் இயங்கும் பல கடைகளை, சாத்தியமான இடங்களில் 500 சதுர அடியாக விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேபோல், பழைய கட்டிடங்களில் செயல்படும் கடைகளில் சீரமைப்பு பணிகள், வண்ணம் பூசுதல், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் விற்பனை நிலையங்களின் செயல்திறனை உயர்த்துவது மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வணிகச் சூழலை உருவாக்கும் நோக்கமும் உள்ளது.
அண்டை மாநில நிறுவனங்களின் ஆர்வம்
தமிழ்நாட்டு சந்தையில் நுழைவதற்காக அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வரும் பல பிரபல மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், அவர்கள் தமிழகத்தில் செயல்படுவது மாநிலத்தின் கலால் வரி அமைப்பு மற்றும் விலை நிர்ணயக் கொள்கைகளைப் பொறுத்தே அமையும்.
அதாவது, புதிய பிராண்டுகள் வருவதற்கான வாய்ப்பு உருவாகியிருந்தாலும், அவற்றின் இறுதி விற்பனை விலை மற்றும் வணிக சாத்தியக்கூறுகள் குறித்து அரசும் நிறுவனங்களும் விரிவான ஆலோசனையில் ஈடுபட வேண்டியிருக்கும்.
வருவாய் உயர்வா... போட்டி அதிகரிப்பா?
டாஸ்மாக் வருவாயை அதிகரிப்பதற்கும், நுகர்வோருக்கு கூடுதல் தேர்வுகளை வழங்குவதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், புதிய பிராண்டுகள் அறிமுகமாகும் பட்சத்தில் தமிழக மதுபான சந்தையில் போட்டி அதிகரித்து, தற்போதுள்ள விற்பனை அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என வணிக வட்டாரங்கள் கருதுகின்றன.
அடுத்த ஆறு மாதங்களில் தமிழக அரசின் இந்த திட்டம் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வருகிறது, எந்தெந்த புதிய பிராண்டுகள் டாஸ்மாக் கடைகளில் இடம்பிடிக்கின்றன என்பது மதுபானத் துறையிலும் வர்த்தக வட்டாரங்களிலும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications