பண பரிவர்த்தனை நடந்தது உண்மை! ஆனால்! ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷின் கோரிக்கை மனு நிராகரிப்பு
சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற சுரேஷின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தகவலை பெற்றது.
அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும் கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி,
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் தம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், தமக்கும் ஆருத்ரா நிறுவனத்தின் மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வாதிட்டார்.
அப்போது நீதிபதி, ஆவணங்களுடன் ஆஜராகும்படி அனுப்பப்பட்டுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் போன்ற விவரங்கள் இல்லை என்பதால் சம்மனை ரத்து செய்யப் போவதாகவும், வேண்டுமானால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பும்படியும் காவல்துறையிடம் தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, சம்மனை ரத்து செய்ய வேண்டாம் எனவும், இந்த சம்மன் அனுப்பபட்டது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அப்போது, காவல்துறை பதிலளிக்கும்வரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டுமென ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நடிகர் ஆர்.கே. சுரேஷ் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர். அண்ணாமலை வருங்கால முதல்வர் என ஒரு விழாவில் கூவி அண்ணாமலைக்கே அதிர்ச்சி கொடுத்தவர். இவர் ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்டவுடன் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்த போன் போட்டாலும் ஸ்விட்ச் ஆப் என வந்ததாகவும் போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநரும் பாஜக நிர்வாகியுமான ஹரீஷ் கைது செய்யப்பட்டார். பாஜகவில் பதவி வாங்க மோசடி செய்த பணத்தையே கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அது போல் நடிகர் ரூசோவும் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு சில லட்சங்களை லஞ்சமாக கொடுத்ததாக ரூசோ வாக்குமூலம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications