“நேசித்தவர்களை இழந்த குடும்பங்களுக்கு தைரியம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்”.. நடிகர் ரவி மோகன் இரங்கல்
சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக நடிகர் ரவி மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார். "இந்த துயரமான நேரத்தை எதிர்கொள்ள மன உறுதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்" என ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 17 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய காவல் துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாமக்கல்லில் பிரச்சாரம் முடித்துவிட்டு பிற்பகல் 3 மணிக்குப் பிறகுதான் விஜய் அங்கிருந்து கிளம்பினார்.
இதற்கிடையே, கரூர் வேலுச்சாமிபுரத்தில் பகல் 12 மணி முதலே தொண்டர்கள், ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சாரப் பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதனால் இரவு 7.15 மணிக்குதான் பிரச்சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.
அங்கு விஜய் பேச ஆரம்பித்தபோது, அவரது மைக் வேலை செய்யவில்லை. அவரது பேச்சைக் கேட்பதற்காக பின்னால் இருப்பவர்கள் நெருங்கியடித்தபடி பிரச்சாரப் பேருந்தை நோக்கி வந்தனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கினர்.
விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மூச்சுத் திணறி பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். மேலும், அப்பகுதியில் இருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். விஜய் பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்டோரை மீட்கவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, 50-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகமும் அறிக்கை கேட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூரில் நடந்த துயரச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரவி மோகன், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரவி மோகன் வெளியிட்டுள்ள பதிவில், "கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த துயரமான நேரத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு மன உறுதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். ஆன்மா சாந்தியடையட்டும்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications