‛அதெல்லாம் காமெடி’.. 150 ஆண்டு உயிரோடு இருப்பேன் என பேசிய சரத்குமார் திடீர் ‛யூடர்ன்’.. என்னாச்சு?
சென்னை: ‛‛150 ஆண்டுகள் நான் வாழ்வேன். இதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். 2026ல் என்னை முதல்வராக்கினால் அந்த வித்தையை சொல்வேன்'' என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கூறியது இணையதளங்களில் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் தான் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகராக இருந்த சரத்குமார் அரசியலில் தீவிரமாக செயல்பட தொடங்கினார். மேலும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு 2011 தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். இதையடுத்து 2016 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன்பிறகு அவருக்கு அரசியலில் அதிர்ஷ்ட காற்று என்பது வீசவில்லை. இந்நிலையில் தான் மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசினார். அப்போது அவர் கூறிய ஒரு கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதாவது "எனக்கு வயது 69 ஆகிறது. 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் இப்போதும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அப்படி என்னால் இருக்க முடியும். அதற்கான வித்தையை நான் கற்று வைத்திருக்கிறேன். அந்த வித்தையை 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் என்னை அரியணையில் ஏற்றும்போது சொல்வேன்"என்றார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. மேலும் பலரும் அவரது பேச்சுக்கு கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான்'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு பின் சரத்குமார் தனது முந்தைய பேச்சு பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "ஒரு மீட்டிங்கில் பேசும்போது, சுற்றியிருப்பவர்களின் இறுக்க நிலையை தளர்வுபடுத்த வேண்டும் என்பதற்காக காமெடியாக பேசினேன். அது இவ்வளவு பெரிய செய்தியாகும்போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். ஒரு கட்சி தொண்டருக்கு அவரது தலைவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை எனக்கும் உள்ளது. இதை மறுக்க முடியாது. எதற்கு பொய் சொல்ல வேண்டும். நான் அதற்கு முயற்சிப்பேன். யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்" என்றார்.
மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்த கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நாட்டுக்கு விருதுகளை வாங்கி கொடுத்த மல்யுத்த வீரர்களை அப்படி வலுக்கட்டாயமாக கைது செய்தது தவறு. நாடாளுமன்ற விழாவை இது பாதித்துவிடக்கூடாது என்பதால் அப்படி செய்திருக்கலாம். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பின்போது நடந்த பூஜை வழக்கமான ஒன்று தான். அதில் எனக்கு எதுவும் தவறாக தோன்றவில்லை'' என கூறிவிட்டு புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications