நடிகர் சத்யராஜ் மகள் அரசியலில் என்ட்ரி.. திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ்! யார் இவர் தெரியுமா?
சென்னை: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் சேர்ந்தார். நடிகர் சத்யராஜ் திராவிட கொள்கை மற்றும் பெரியார் கொள்கைகளை பேசி வருகிறார். அவர் திமுகவின் ஆதரவாளர் என கூறப்படும் நிலையில் அவரது மகள் திவ்யா சத்யராஜ் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.
திராவிட கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர் நடிகர் சத்யராஜ். இவர் மேடைகள் தோறும் பெரியார் கருத்துகளை முழங்கி வருகிறார். மேலும் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கடந்த 2007 ம் ஆண்டு ‛பெரியார்' என்ற திரைப்படம் வெளியானது. அதில் நடிகர் சத்யராஜ் தான் பெரியாராக நடித்தார்.

நடிகர் சத்யராஜ் மனைவி பெயர் மகேஸ்வரி. மகள் பெயர் திவ்யா. மகன் பெயர் சிபிராஜ். இதில் சத்யராஜ் பாணியில் சிபிராஜ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அவர் ஹீரோவாக நடித்தார். மகள் திவ்யா சினிமாவில் இருந்து விலகியே இருந்தார்.
இந்நிலையில் தான் திவ்யா சத்யராஜ் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என்று சமீபகாலமாக தகவல்கள் பரவி வந்தன.
தற்போது அந்த தகவல் உண்மையாகி உள்ளது. ஆம், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் சேர்ந்தார். திமுகவின் கட்சி கொடியான கருப்பு - சிவப்பை பிரதிபலிக்கும் வகையில் கருப்பு - சிவப்பு நிற சேலை அணிந்து அவர் திமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழக முதல்வர், கழகத் தலைவர் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்தார் அப்போது, கழகப் பொருளாளர் டிஆர் பாலு எம்பி., முதன்மைச் செயலாளர் கேஎன் நேரு, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிகே சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்." என கூறப்பட்டுள்ளது.
திமுகவில் சேர்ந்துள்ள நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதோடு நாடு முழுவதும் பல இடங்களில் மதிய உணவு வழங்கி வரும்‛அட்சய பாத்திரம் அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதுவராக செயல்பட்டு வருகிறார். இந்த அறக்கட்டளை என்பது தனியார் தொண்டு நிறுவனமாகும். அதன்பிறகு 2020ல் மகிழ்மதி இயக்கத்தை தொடங்கினார். அதன்மூலம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திவ்யா சத்யராஜுக்கு பாஜக சீட் வழங்கியதாகவும், அதில் போட்டியிட அவர் மறுத்ததாகவும் தகவல்கள் பரவின. அதனை கட்சியின் பெயரை கூறாமல் திவ்யா சத்யராஜ் உறுதி செய்திருந்தார். அதுபற்றி அவர், ‛‛ஒரு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட அழைப்பு வந்தது உண்மை தான். மதத்தை பின்பற்றும் கட்சியுடன் நான் சேர விரும்பவில்லை. எனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளது. எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியில் சேரப்போகிறேன் என்பதை தெளிவுப்படுத்துவேன்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் திவ்யா சத்யராஜ் இன்று திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications