நடிகர் செந்திலை நெகிழ வைத்த பொக்கிஷம்! சொந்த ஊர் நினைவுகளை மீட்டெடுத்த 'மகத்தான மனிதன்'
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாற்றுப் பின்னணி கொண்ட முக்கியப் புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ஹெச். அமீர் சுல்தான் எழுதியுள்ள 'மானுட சேவையில் ஒரு மகத்தான மனிதன் - என்.ஹசன் முஹம்மது M.A., B.L.' என்ற வரலாற்று நூல் சமீபத்தில் முதுகுளத்தூரில் வெளியிடப்பட்டது. பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற என். ஹசன் முஹம்மது, முதுகுளத்தூரின் ஊராட்சி மன்றத் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றி மக்கள் சேவையில் முத்திரை பதித்தவர்.

நகைச்சுவை நடிகர் செந்தில், முதுகுளத்தூர் அருகேயுள்ள இளஞ்செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதனால் தனது சொந்தப் பகுதியான முதுகுளத்தூரில் வாழ்ந்து மக்கள் பணியாற்றிய தலைவர் என். ஹசன் முஹம்மதுவின் பொதுவாழ்வுப் பணிகள் குறித்து நடிகர் செந்தில் ஏற்கனவே நன்கு அறிந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் செந்திலின் இல்லத்திற்குச் சென்ற ஜெ. சீனி முகம்மது, அவரிடம் இந்த நூலை நேரில் வழங்கிச் சிறப்பித்தார்.
தமது சொந்த மண்ணின் பெருமையை விளக்கும் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட நடிகர் செந்தில், நூலாசிரியர் ஹெச். அமீர் சுல்தானுக்கும், மறைந்த தலைவரின் குடும்பத்தினருக்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
