"சினிமா என்னை கைவிட்டுட்டா,." கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், தனது வாழ்க்கைக்குக் கல்வி எந்தளவுக்கு நம்பிக்கை தரும் ஒன்றாக இருந்தது என்பது குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும், மார்க்கிற்காக கொஞ்சம் படியுங்கள்.. வாழ்க்கைக்காக நிறையப் படியுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்- மாணவிகள், அரசுத் திட்டங்கள் மூலம் தாங்கள் எந்தளவுக்குப் பயன் அடைந்தன என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன்
அதன்படி இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். அங்கு மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன், குடும்பத்தில் ஒருவர் படித்தால் அடுத்த தலைமுறையே முன்னேறும் என்றும் அதற்குத் தனது குடும்பமே சாட்சி என்றும் குறிப்பிட்டார்.
நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் பேசுகையில், "கல்வி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. ஆடியோ லான்ச் என்றால் எதாவது பேசிவிடலாம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் பார்த்துத் தான் பேச வேண்டும். பேசும் ஒவ்வொரு விஷயமும் முக்கியமானதாக இருக்க வேண்டும். இங்கு மாணவர்களின் வாழ்த்து சொல்லவே வந்தேன். ஆனால், இங்குப் பேசுவோரைப் பார்க்கும்போது தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
மாணவர்களின் ஆர்வம்
அரசு இவ்வளவு நல்ல திட்டங்களைச் செயல்படுத்துகிறது. அது எந்தளவுக்கு நல்ல விஷயமோ அதையும் தாண்டி, எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்று மாணவர்கள் இருப்பது நல்ல விஷயமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் படித்தால் அடுத்து வரும் தலைமுறையே நன்றாக இருக்கும் என்பதற்கு நானே உதாரணம்.
எனது அப்பா ஒருவேளை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் போனார். நான் 3 வேலையும் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் போனேன். அவர் நடந்து பள்ளிக்குச் சென்றார். நான் ஆட்டோ ரிக்ஷாவில் பள்ளிக்குச் சென்றேன். பொருளாதாரச் சூழல்களால் எனது அப்பா ஒரு டிகிரி தான் படித்தார். ஆனால், என்னை 2 டிகிரி படிக்க வைத்தனர். எனது அக்கா 3 டிகிரி படித்திருக்கிறார்.
படிப்பு முக்கியம்
நீ படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இல்லையே என நீங்கள் கேட்கலாம். ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சினிமா துறை மிகவும் சவாலானது. இதில் சவால் வரும் போதெல்லாம் எனக்கு இருக்கும் ஒரே தைரியம் என்கிட்ட இரு டிகிரி இருக்கு என்பதுதான். இங்க இருந்து அனுப்புனா கூட என்னால் ஏதாவது வேலை செஞ்சு பிழைக்க முடியும் என்ற தைரியம் இருக்கிறது. அதற்குக் கல்வியே காரணம்.
அந்த ஒரு நம்பிக்கையில் தான் உங்கள் முன்பு நின்று கொண்டு இருக்கிறேன். நான் உங்களிடம் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், எல்லோரிடமும் மதிப்பாக இருக்க வேண்டுமானால்.. நல்ல வீடு கட்ட வேண்டுமானால்.. அப்பா, அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் படிக்க வேண்டும். அதை மட்டும் செய்யுங்கள்.!
வாழ்க்கைக்கா நிறையப் படியுங்கள்
மார்க்கிற்காக கொஞ்சம் படியுங்கள்.. வாழ்க்கைக்காக நிறையப் படியுங்கள். என்னாலேயே முடியும்போது என்னை விடச் சிறந்த திறமைகளை வைத்துள்ள இன்றைய மாணவர்களாலும் முடியும். தமிழ்நாடு அரசின் திட்டங்களால் வரும் தலைமுறையும் பயன் பெற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications