‛‛மனமார்ந்த வாழ்த்துகள்’’..ராகுல் காந்திக்கு திடீரென வாழ்த்து கூறிய நடிகர் விஜய்..கவனம் ஈர்த்த பதிவு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ரேபரேலி எம்பியுமான ராகுல் காந்திக்கு திடீரென்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மையை பெற 272 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 240 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி கட்சிகளின் 53 எம்பிக்கள் உதவியுடன் ஆட்சியை பிடித்தது.

3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். மத்திய அமைச்சரவையில் அதிகபட்சம் 81 பேர் வரை இடம்பெறலாம். ஆனால் முதற்கட்டமாக பிரதமர் மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இன்னும் 9 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணி மொத்தம் 236 தொகுதிகளை கைப்பற்றியது. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி மட்டும் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்து ரேபரேலி எம்பியாக தொடர்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு 98 இடங்கள் உள்ளன.
மேலும் கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காமல் போனது. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை மேற்கொண்டது. இதில் ராகுல் காந்தி லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு ‛இந்தியா' கூட்டணி தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இதன்மூலம் ராகுல் காந்தி லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட உள்ளார். இந்நிலையில் தான் லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட வாழ்த்து செய்தியில், ‛‛காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒருமனதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். எதிர்க்கட்சி தலைவராக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துகள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications