வேலைக்கே ஆகாது.. விஜய்க்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்! அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்.. ஜெயிப்பாரா?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் நடிகர் விஜய். அதற்கேற்றார் போல் அவரது அரசியல் செயல்பாடுகளும் இருக்கிறது. தற்போதைக்கு கட்சியில் பல புதிய நிர்வாகிகளை சேர்த்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க விஜய்க்கு சிக்கல் மேல் சிக்கல் தான் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். இன்னும் நகர, ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை நியமிக்காதது, அரசியலுக்கு வந்து ஓராண்டாகியும் கட்சி சார்பாக நேரடியாக எந்தவித போராட்டத்திலும் கலந்து கொள்ளாதது, எந்த கட்சியும் கூட்டணிக்கு வராதது என பல விஷயங்கள் அவருக்கு எதிராக இருப்பதாக கூறுகின்றனர்.
நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஜனநாயகன் படத்தின் போது அரசியலுக்கு வந்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிகளையும் படுதோல்விகளையும் சந்தித்து இருந்தாலும் விஜய்க்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் செல்வாக்கு விஜய்க்கு அதிக அளவில் இருக்கிறது. அந்த வகையில் தன்னிடம் இருக்கும் இளைஞர் படையை அரசியல் படுத்த வேண்டும் என திட்டமிட்ட விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு கட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் குறி வைத்து களமிறங்க இருக்கிறார் விஜய். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் இருக்கும் முக்கிய ஆளுமைகளை கட்சிக்குள் கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் கடந்த முறை பேச்சாளர் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட சிலர் கட்சியில் சேர்ந்தனர். இன்றும் ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அருண்ராஜ், அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கட்சியில் சேர்ந்துள்ளனர் .
அருண்ராஜ் ஐஏஎஸ் வரவு கட்சி நிர்வாகிகளிலேயே புதிய ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். இது ஒரு புறம் இருக்க விஜய்க்கு பல சிக்கல்கள் 2026 தேர்தலில் காத்திருக்கிறது என்கின்றனர். தற்போதைக்கு மாநில நிர்வாகிகளில் குறிப்பிட்ட சிலரை தவிர வேறு யாரையுமே யாருக்கும் தெரியாது. மேலும் இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கிட்டத்தட்ட 112 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களும் தற்போது இருந்தே தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர்.
ஆனால் கட்சியின் அடிப்படை கட்டமைப்பான மாநகர், நகர், ஒன்றியம், கிளைக் கழக நிர்வாகிகள் இதுவரை நியமிக்கப்படவில்லை. பூத் கமிட்டி ஏஜென்ட்களை நியமித்து விட்டோம் எனக் கூறினாலும் நகர, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் தான் கட்சியின் அடிப்படை. ஆனால் அவர்களை இன்னும் நியமனம் செய்யப்படாதது விஜய் கட்சியின் மிகப்பெரிய குறைபாடு.
அடுத்ததாக விஜய் நேரடியாக இதுவரை எந்த மக்கள் போராட்டத்திலும் அல்லது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதே இல்லை. பரந்தூருக்கு சென்றது மட்டுமே ஓரளவு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அதற்குப் பிறகு சினிமா சூட்டிங் செல்வது போல் சாலையில் செல்லும் வழியில் மக்களை பார்த்து கையசைப்பது மட்டுமே விஜயின் அரசியலாக இருக்கிறது. கூட்டத்தை பார்த்துவிட்டு விஜய்க்கு அது வாக்குகளாக மாறும் எனக் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என கூறும் அரசியல் நிபுணர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்சினைகளை பட்டியலிட்டு அதற்கேற்றார் போல் நேரில் சென்று மக்களிடையே பேச வேண்டும், ஊடகங்களை சந்திக்க வேண்டும், ஆனால், அது போன்ற எந்தவித செயல்பாடுகளையும் செய்யாமல் சினிமாவில் செய்வது போல வந்தோம் சென்றோம் இன்று இருந்தால் வேலைக்காகாது என்கின்றார்.
அடுத்ததாக விஜய்க்கு இதுவரை எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதுதான். தமிழகத்தை பொறுத்தவரை தனித்துப் போட்டியிட்டு வெற்றி என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை. ஒரு வேளை தங்களது வாக்கு வங்கியை தெரிந்து கொள்ள.. மக்கள் தங்களுக்கு எவ்வளவு ஆதரவு தருவார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தனித்துப் போட்டியிடலாம்.
குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் திமுக, அதிமுக கூட கூட்டணி கட்சிகளை தான் களம் இறக்க வேண்டி இருக்கிறது. அதனால் தான் இன்று வரை திமுகவும் அதிமுகவும் தேர்தல் என்றாலே கூட்டணி விவகாரங்களை மிகத் தீவிரமாக கையாள்கிறார்கள். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை இதுவரை கூட்டணிக்கு தயார் என ஒரு கட்சி கூட சொல்லவில்லை. மேலும் பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு கூட்டணி வாய்ப்பு இருப்பது தெரியவில்லை. இவ்வாறாக மூன்று மெகா சிக்கல்களை விஜய் சந்திக்க வேண்டும். இவற்றையெல்லாம் தவிடு பொடியாக்க ஒரு வருடம் போதாது.. விஜய் இன்னும் பல வருடங்கள் பயணிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications