விஜய் உதவி பண்ணுறது நல்லதுதான்.. சில நடிகர்கள் இருக்காங்க.. கேப்பில் ரஜினியை வாரிய செல்லூர் ராஜூ
சென்னை: விஜய் வந்து ஒவ்வொரு தொகுதியிலும் கல்வி உதவித்தொகை வழங்குவது நல்லதுதான்.. வரவேற்கப்பட கூடிய ஒன்று. விஜய் நல்லதுதான் செய்கிறார். இது போல எல்லா நடிகர்களும் வர வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நடிகர் விஜய் ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு தொகுதி வாரியாக உதவி தொகை வழங்குவது நல்ல விஷயம் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக செல்லூர் ராஜூ கூறியதாவது:-

விஜய் வந்து ஒவ்வொரு தொகுதியிலும் கல்வி உதவித்தொகை வழங்குவது நல்லதுதான்.. வரவேற்கப்பட கூடிய ஒன்று. விஜய் நல்லதுதான் செய்கிறார். இது போல எல்லா நடிகர்களும் வர வேண்டும். எம்.ஜி.ஆர் நடிகராக இருக்கும்போது வெள்ளம், விபத்து ஏற்பட்டால் அவரே முன்வந்து உதவி பண்ணுவார். அந்த மனசு வேண்டும். சில பேர் விளம்பரத்திற்காக கொடுப்பாங்க.
கல்வி உதவி தொகை வழங்கும் விஜய்: விளம்பரத்திற்காக கொடுத்து விட்டு போய்விடுவார்கள். விஜய் உதவி செய்ய தொடங்கியிருக்கிறார் என்றால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மற்ற நடிகர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் இருக்கிறார்... எவ்வளவோ பணம் வாங்குகிறார். அவர் எல்லாம் அதிகமாக உதவி பண்ண வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இதுபோன்ற உதவிகள் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்" என்றார்.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் அரசியலுக்கு வர இருப்பதாக பல ஆண்டுகளாகவே அவ்வப்போது பேச்சுக்கள் எழுவதுண்டு. ஆனால், சமீப காலமாக விஜயின் அரசியல் வருகை குறித்த பேச்சுக்கள் பலமாக அடிபட தொடங்கியிருக்கின்றன. இதற்கு அவரது விஜயின் செயல்பாடுகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது போக விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
6 ஆயிரம் அறுசுவை உணவு: அதுமட்டும் இன்றி தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் விஜய் தரப்பில் கேட்டு பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், விஜய் அரசியலுக்கு வருவது நிச்சயம் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், வரும் 17 ம் தேதி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து கல்வி உதவி தொகை வழங்க உள்ளதாக அவரது மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. 6 ஆயிரம் அறுசுவை உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications