அரசியல்ன்னா என்னன்னே தெரியாது.. கண்டிப்பா வரமாட்டேன்.. என்னங்க இது! விஜய் இப்படி சொல்லியிருக்காரே!
சென்னை: அரசியல்ன்னா எனக்கு என்னன்னே தெரியாது என்றும் கண்டிப்பாக வரமாட்டேன் என்றும் நடிகர் விஜய் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் தந்தை எஸ்ஏ சந்திரசேகர்- மகனிடையே பேச்சுவார்த்தை என்பது இல்லாமல் போய்விட்டது. இதை எஸ்ஏசியே ஒப்புக் கொண்டுள்ளார், நாங்கள் இன்னிக்கு பேச மாட்டோம், நாளை கூடி கொள்வோம், இதை ஏன் பெரிதுப்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனாலும் நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவார் என சொல்லப்பட்டது.
ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. மாறாக தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தனது பெயரையும் தன் படம் பொறித்த கொடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என விஜய் தெரிவித்த நிலையில் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வென்றனர்.
அவர்களை நடிகர் விஜய் அழைத்து நேரில் பாராட்டினார். அது போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அவர்கள் போட்டியிட்டனர். அதே போல் அண்மையில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு அனைத்து மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டிருந்தார். அம்பேத்கரை முன்னிறுத்தி விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
எப்போதும் சமூகம் சார்ந்த கருத்துகளுக்கும் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வரும் இயக்குநர் பா ரஞ்சித்துடன் சேர்ந்து விஜய் களமிறங்க போகிறாரா என்ற பேச்சும் இருந்தது. இப்படி அரசியலுக்கு விஜய் வருவார் என அடுத்தடுத்த செயல்களை வைத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள். அப்படியிருக்கும் போது அதில் மண் அள்ளி போடுவது போல் விஜய்யின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என விஜய்யிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தனக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் கூறி வருகிறார். அதே போல் தன்னை பாதித்த சம்பவம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
தங்கை வித்யா இறந்ததுதான் தன்னை மிகவும் பாதித்த சம்பவம் என கூறிய விஜய், என் தங்கையை நாங்கள் புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மகிழ்ச்சிகரமான நாள் என்றால் அது 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி என்னுடய முதல் படம் நாளைய தீர்ப்புதான். விஜயகாந்த் எனது சொந்த அண்ணனை போன்றவர் என தெரிவித்துள்ள விஜய், விஜயகாந்துடன் நடிப்பீர்களா என கேட்டகற்கு சான்ஸ் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என விஜய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications